விளையாட்டு

உறுதியான பராகுவேயை வெளியேற்றிய எம்பாப்பேவின் கோல்: காலிறுதியில் பிரான்ஸ் | FIFA WC 2026

ஆர்.முத்துக்குமார்

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பிலடெல்பியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் வீரர்களும் பலமுறை மோதிக்கொண்டதால் போட்டி பரபரப்பாகவும் பதற்றமாகவும் அமைந்தது.

ஆட்டத்தின் முதல் பாதி முழுவதும் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் பராகுவே வீரர்கள் கட்டுக்கோப்பான தற்காப்பை வெளிப்படுத்தினர். தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்த பிரான்ஸ் அணிக்கு தெளிவான கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் செய்தனர். இதனால் பிரான்ஸ் வீரர்கள் தொலைதூர ஷாட்களை மட்டுமே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

70-வது நிமிடத்தில் போட்டியின் திருப்புமுனை ஏற்பட்டது. மாற்று வீரராக களமிறங்கிய டெசிரே டுவே, டியாகோ கோமேஸால் தடுக்கப்பட்பட்டார். வேண்டுமென்றே தன் கால் மூலம் அவர் காலினை மறிக்குமாறு செய்தார். முதலில் நடுவர் இல்கிஸ் தந்தாஷெவ் பெனால்டி வழங்க மறுத்தாலும், VAR பரிசீலனைக்குப் பிறகு தனது முடிவை மாற்றி பிரான்ஸுக்கு பெனால்டி வழங்கினார்.

பராகுவே வீரர்கள் பெனால்டியை தாமதப்படுத்தவும், பெனால்டி ஸ்பாட்டை சேதப்படுத்தவும் முயன்றபோதிலும், நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே அமைதியாக பந்தை வலையின் கீழ் மூலையில் அனுப்பி கோல் அடித்தார். இந்த கோலின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது கோல்களின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்திய அவர், மெஸ்ஸியின் சாதனையுடன் சமநிலையை எட்டினார்.

கோல் விட்டுக்கொடுத்த பின்னர் பராகுவே வீரர்களின் ஏமாற்றம் வெளிப்படையாக தெரிந்தது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அவர்கள் பல கடுமையான இடையூறுகளில் ஈடுபட்டனர். ஆனால், நடுவர் எந்த பராகுவே வீரருக்கும் மஞ்சள் அட்டை வழங்காதது பிரான்ஸ் அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. வீரர்களுக்கு இடையேயான வாக்குவாதங்களும் மோதல்களும் இறுதி விசில் ஒலித்த பிறகும் தொடர்ந்தன.

கூடுதல் நேரத்தில் எம்பாப்பே இரண்டாவது கோலை அடிக்க நெருங்கிய நிலையில், பராகுவே கோல்கீப்பர் ஓர்லாண்டோ கில் அபாரமான இரட்டை சேவ் செய்து அணியை காப்பாற்றினார். போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களிடையேயான பதற்றம் தொடர்ந்த நிலையில், எம்பாப்பே கோல்கீப்பர் கிலுடன் கைகுலுக்க மறுத்த சம்பவமும் கவனம் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதியில் மொராக்கோ அணியை எதிர்கொள்ள உள்ளது.

SCROLL FOR NEXT