சென்னை: 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்தி யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது: "தற்போது நாட்டின் பல நகரங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் மாநில அணி சார்பில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இது மிகப்பெரிய உற்சாகத்தை கிரிக்கெட் வீரர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அதிக அளவில் சர்வதேச டி20 போட்டிகள், டி20 லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதைப்போலவே டெஸ்ட் போட்டிகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுவது மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்தப் போட்டிக்குப் பின்னர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று விடுவர்.
விஜய் ஹசாரே போட்டியில் ரோஹித்தும், விராட் கோலியும் விளையாடத் தொடங்கிய பின்னர் அந்தப் போட்டியை ஏராளமான ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். விளையாட்டில் தனி நபர்களை விட விளையாட்டுதான் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய் ஹசாரே போட்டி போன்று பல காலமாக நடத்தப்பட்டு வரும் போட்டிகளுக்கு கூட விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர விளையாட்டு வீரர்களை விளையாட வைக்க வேண்டிய நிலை உள்ளது.
டெஸ்ட் போட்டிகள், சர்வதேச டி20 போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை 50 ஓவர் போட்டிகளுக்கும் நாம் கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் சர்வதேச ஒருநாள் போட்டிகளை நடத்த ஐசிசி ஏற்பாடு செய்யவேண்டும். தற்போது ஆண்டுதோறும் ஐசிசி சார்பில் ஒரே ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.
அதேபோல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. வருவாயைப் பெருக்கும் நோக்கில் நடத்தப்பட்டாலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை, உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடத்துகிறது.
அதேபோல் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.