விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை: இந்தியா - பாகிஸ்தான் 10-ம் தேதி மோதல்

செய்திப்பிரிவு

கேப்​ட​வுடன்: 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரை தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, கென்யா ஆகிய நாடு​கள் இணைந்து நடத்த உள்​ளன. இந்த தொடருக்​கான போட்டி அட்​ட​வணையை ஐசிசி நேற்று தென் ஆப்​பிரிக்​கா​வின் கேப்​ட​வுடன் நகரில் வெளி​யிட்​டது. இதன்​படி உலகக் கோப்பை தொடர் 2027-ம் ஆண்டு அக்​டோபர் 2-ல் தொடங்கி நவம்​பர் 21 வரை நடை​பெறுகிறது.

இந்​தியா ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பாகிஸ்​தான், ஆஸ்​திரேலி​யா, ஆப்​கானிஸ்​தான், ஜிம்​பாப்​வே, தகுதி சுற்று அணி ஆகிய​வை​யும் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்​கா, இலங்​கை, இங்​கிலாந்​து, வங்​கதேசம், தகுதி சுற்று அணி ஆகிய​வை​யும் உள்​ளன.

இந்​தியா தனது முதல் ஆட்​டத்​தில் அக்​டோபர் 7-ல் ஆஸ்​திரேலி​யாவை எதிர்​கொள்​கிறது. 10-ம் தேதி இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் ஜோகன்​னஸ் பர்க் நகரில் மோதுகிறது. 14-ம் தேதி ஆப்​கானிஸ்​தானுட​னும், 17-ம் தேதி தகுதி சுற்று அணி​யுட​னும், 24-ம் தேதி ஜிம்​பாப்​வே​யுட​னும் இந்​திய அணி மோதுகிறது.

2-வது சுற்​றான சூப்​பர் 7 ஆட்​டங்​கள் அக்​டோபர் 25 முதல் நவம்​பர் 14 வரை​யும், அரை இறுதி ஆட்​டங்​கள் நவம்​பர் 17, 18-ம் தேதி​களி​லும் நடை​பெறுகிறது. இறு​திப் போட்டி நவம்​பர் 21-ல் ஜோகன்​னஸ்​பர்க்​கில்​ நடைபெறுகிறது.

மல்யுத்தத்தில் நிதேஷுக்கு வெள்ளி: ஆசிய விளை​யாட்​டில் ஆடவருக்​கான மல்​யுத்​தத்​தில் கிரகோ ரோமன் 97 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் நிதேஷ் சிவாச் 0-4 என்ற கணக்​கில் ஜப்​பானின் யூரி நகசாடோ​விடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். இந்​தப் பிரி​வில் 1962-ம் ஆண்​டுக்​குப் பிறகு தற்​போது​தான் இந்​தியா பதக்​கம் வென்​றுள்​ளது.

வாலிபாலில் ஏமாற்றம்: ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான வாலி​பால் கால் இறுதி சுற்​றில் இந்​தியா 19-25, 23-25, 18-25 என்ற செட் கணக்​கில் பாகிஸ்​தானிடம் தோல்வி அடைந்​தது. இதனால் 1986-ம் ஆண்​டுக்கு பின்​னர் பதக்​கம் வெல்​லும் இந்​தி​யா​வின் கனவு கலைந்​தது.

ஸ்குவாஷில் வெண்கலம்: ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஸ்கு​வாஷில் இந்​திய மகளிர் அணி அரை இறு​தி​யில் ஹாங் காங்​குடன் மோதி​யது. இதில் இந்​திய மகளிர் அணி 1-2 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றது. அனஹத் சிங் 11-9, 11-8, 6-11, 11-13, 10-12 என்ற கணக்​கில் சின் யுக் சானிடம் தோல்வி அடைந்​தார்.

தன்வி கன்னா 4-11, 13-11, 11-9, 13-11 என்ற கணக்​கில் கா யி லீயை வீழ்த்​தி​னார். ஆனால் அடுத்த ஆட்​டத்​தில் ஜோஷ்னா சின்​னப்பா 4-11, 7-11, 9-11 என்ற செட் கணக்​கில் ஹோ ட்சே லோக்​கிடம் வீழ்ந்​தார்.அபய் சிங், வீர் சோட்​ரானி, வேல​வன் செந்​தில் குமார் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய ஆடவர் அணி அரை இறு​தி​யில் 1-2 என்ற கணக்​கில் மலேசி​யா​விடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றியது. இதில் ஜோஷ்னா சின்​னப்​பா, அபய் சிங், வேல​வன் செந்​தில்​கு​மார் ஆகியோர் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள்​.

பாய்மரப்படகில் வெள்ளி: ஆசிய விளையாட்டு போட்டியில் பாய்மரப்படகின் ஸ்கிஃப் பிரிவில் இந்தியாவின் மனு பிரான்சிஸ், பிரின்ஸ் குரிசிங்கல் நோபல் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய அணி 9 பந்தய சுற்றுகளின் முடிவில் மொத்தம் 23 புள்ளிகளை பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது. சீனா தங்கப் பதக்கமும், ஹாங் காங் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. சகோதரர்களான மனு பிரான்சிஸ், பிரின்ஸ் குரிசிங்கல் நோபல் ஆகிய இருவரும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள். மகளிருக்கான பாய்மரப்படகின் ஸ்கிஃப் பிரிவில் இந்தியாவின் ஹர்ஷிதா தோமர், ஷீத்தல் வர்மா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

வில்வித்தையில் வெண்கலம்: வில்வித்தையில் ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் கணேஷ் மணி ரத்னம் திருமுரு 149-144 என்ற புள்ளிகள் கணக்கில் வியட்நாமின் காங் டக் டாங்கை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

SCROLL FOR NEXT