கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
அந்த அணி ஒரு கட்டத்தில் 10.2 ஓவர்களில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. குயிண்டன் டி காக் 10, ரியான் ரிக்கெல்டன் 0, கேப்டன் எய்டன் மார்க்ரம் 18, டேவிட் மில்லர் 6, டெவால்ட் பிரேவிஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்கோ யான்சன் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் விளாசியதால் தென் ஆப்பிரிக்க அணியால் கவுரவமான இலக்கை கொடுக்க முடிந்தது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது.
நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, கோல் மெக்கோன்ஜி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் ஆகியோரது அதிரடியால் 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான ஃபின் ஆலன் 33 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 11 பந்துகளில், 13 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான டிம் ஷெய்பர்ட் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவர்களில் 117 ரன்கள் குவித்து மிரட்டியது. 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டும் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டியில் கால்பதித்து இருந்தது.
விரைவான சதம்
டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ஃபின் ஆலன்.