தோகா: நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 48 அணிகள் பங்கேற்கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான பரிசுத்தொகையை ஃபிபா அறிவித்துள்ளது. இதன்படி தொடருக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.450 கோடியை பரிசாக அள்ளிச்செல்லும். 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணி ரூ.342 கோடியை பரிசாக பெற்றிருந்தது.
கத்தாரில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட இம்முறை 48.9 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 48 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சம்மேளனங்களுக்கும் போட்டிக்கு தயாராவதற்கு ரூ.13.52 கோடி அளிக்கப்படும். மேலும் லீக் சுற்றில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தலா ரூ.81.15 கோடி வழங்கப்படும்.
2-வது சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.99.18 கோடி கிடைக்கும். அதேவேளையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் அணிகள் ரூ.135 கோடியை பெறும். கால் இறுதிக்கு முன்னேறும் அணிகள் ரூ.171 கோடியை பரிசாக பெறும். 4-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.243 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.261 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.297 கோடியும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.