அர்ஜெண்டினா அணி கேப்டன் மெஸ்ஸி

 
விளையாட்டு

FIFA WC 2026: மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு - பட்டத்தை தக்க வைக்குமா?

வேட்டையன்

சென்னை: அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை மெஸ்ஸி கேப்டனாக வழிநடத்துடுகிறார்.

வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் விளையாடப்பட உள்ளது.

இதில் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ம் தேதி அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறுகிறது.

இந்த சூழலில் நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 26 வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். குரூப்-ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா அணி, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் சுற்றில் விளையாடுகிறது.

கடந்த 1930 முதல் 19 முறை அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 1978, 1986 மற்றும் 2022-ல் சாம்பியன் பட்டத்தை அந்த அணி வென்றுள்ளது. 1930, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபோட உலகக் கோப்பை தொடரில் இரண்டாம் இடத்தை அர்ஜெண்டினா பிடித்துள்ளது.

கடந்த 2022-ல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனல்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 4-2 என அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

இந்த முறை சாம்பியன் படத்தை தக்கவைக்கும் முனைப்பில் அர்ஜெண்டினா களம் காண்கிறது. 38 வயதான அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு இது ஆறாவது உலகக் கோப்பை தொடராக அமைந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை தொடரில் 7 கோல்களை மெஸ்ஸி பதிவு செய்திருந்தார். அதோடு சக அணி வீரர்கள் மூன்று கோல் பதிவு செய்யவும் அசிஸ்ட் செய்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. கிளப் அணிக்காக விளையாடிய போது இடது கால் பகுதியில் அவர் காயமடைந்தார். இந்த சூழலில் அவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.

அர்ஜெண்டினா அணி விவரம்

>> கோல்கீப்பர்கள்: எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ ருல்லி, ஜுவான் மூசோ

>> டிஃபெண்டர்கள்: லியாண்ட்ரோ பலேர்டி, நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ, கோன்சாலோ மான்டியல், லிசாண்ட்ரோ மார்டினெஸ், கிறிஸ்டியான் ரொமேரோ, நிக்கோலஸ் ஒடமெண்டி, ஃபகுண்டோ மெடினா, நஹுவேல் மோலினா

>> மிட்ஃபீல்டர்கள்: லியாண்ட்ரோ பரேடெஸ், ரோட்ரிகோ டி பால், வாலண்டின் பார்கோ, ஜியோவானி லோ செல்சோ, எக்ஸிகுயல் பலாசியோஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், என்ஸோ பெர்னாண்டஸ்

>> முன்கள வீரர்கள்: ஜூலியன் அல்வாரெஸ், மெஸ்ஸி, நிக்கோலஸ் கோன்சாலஸ், தியாகோ அல்மடா, கியுலியானோ சிமியோன், நிகோ பாஸ், லாடரோ மார்டினெஸ்

SCROLL FOR NEXT