விளையாட்டு

போஸ்னியாவை எளிதாக வீழ்த்தியது அமெரிக்கா | FIFA WC 2026

செய்திப்பிரிவு

சான்டா கிளாரா: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் சான்டா கிளா​ரா​வில் நடை​பெற்ற நாக் அவுட் சுற்​றில் அமெரிக்கா, போஸ்னியா & ஹெர்​சகோ​வினா அணி​யுடன் மோதி​யது. போட்​டி​யின் தொடக்​கத்​தில் போஸ்னியா அணி அமெரிக்கா​வுக்​குக் கடுமை​யான சவால்​களைக் கொடுத்து கோல் அடிப்​ப​தற்​கான வாய்ப்​பு​களை உரு​வாக்​கியது.

31-வது நிமிடத்​தில் அமெரிக்க அணி​யின் வீரர் ஃபொலாரின் பாலோகன் அடித்த கோல் ஆஃப்​சைடு என மறுக்​கப்​பட்​டது. 45-வது நிமிடத்​தில் மாலிக் திலெமன்ஸ் கொடுத்த நேர்த்​தி​யான பாஸை கட்​டுக்​குள் கொண்டு வந்த ஃபொலாரின் பாலோகன், போஸ்​னியா பின்கள வீரர்​களின் தடுப்​பை​யும் மீறி தாழ்​வான ஷாட் மூலம் பந்தை கோல் வலைக்​குள் தள்​ளி​னார். இதனால் முதல் பாதி​யில் அமெரிக்கா 1-0 என முன்​னிலை பெற்​றது.

64-வது நிமிடத்​தில் போஸ்​னியா வீரர் தாரிக் முஹாரெமோ​விச்சை ஃபவுல் செய்​ததற்​காக, விஏஆர் பரிசீலனைக்​குப் பிறகு அமெரிக்​கா​வின் ஃபொலாரின் பாலோக​னுக்கு ரெட் கார்டு காண்பிக்​கப்​பட்​டது. இதனால் அமெரிக்கா 10 வீரர்​களு​டன் விளையாட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டது. 78-வது நிமிடத்தில் அமெரிக்க அணி​யின் நட்​சத்​திர வீர​ரான கிறிஸ்​டியன் புலிசிக் அடித்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்​கப்​பட்​டது.

82-வது நிமிடத்​தில் அமெரிக்க அணிக்கு ஃப்​ரீ-கிக் வாய்ப்பு கிடைத்​தது. இதில் பாக்​ஸின் வெளிப்​பகு​தி​யில் இருந்து மாலிக் திலெமன்ஸ் அடித்த கர்​லிங் ஷாட் போஸ்​னியா தடுப்​புச் சுவரைத் தாண்டி கோல் வலை​யின் மேல் கார்​னரை துளைத்​தது. இதனால் அமெரிக்க அணி 2-0 என முன்​னிலை பெற்​றது. கடைசி வரை போராடி​யும் போஸ்​னியா & ஹெர்​சகோ​வினா அணி​யால் பதிலடி கொடுக்க முடி​யாமல் போனது.

முடி​வில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது. உலகக் கோப்பை வரலாற்​றில் 2002-ம் ஆண்​டுக்கு பிறகு நாக்​-அவுட் சுற்றில் அமெரிக்கா பெறும் முதல் வெற்றி இது​வாகும். ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் வரும் 6-ம் தேதி பெல்​ஜி​யத்​துடன்​ மோதுகிறது அமெரிக்​க அணி.

முதன்முறையாக 3 வெற்றி

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அமெரிக்கப் பயிற்சியாளர் என்ற வரலாற்றுச் சாதனையை மொரிசியோ பொச்செட்டினோ படைத்துள்ளார்.

2-வது முறையாக...

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் அமெரிக்க அணி வெற்றி பெறுவது இது 2-வது முறையாகும். 1930-ல் நடைபெற்ற முதலாவது உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணி லீக் சுற்றில் முதலிடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. அதன் பிறகு 2002-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மெக்சிகோ அணியை வீழ்த்தி இருந்தது.

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி

உலகக் கோப்பை தொடர்களில் ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக அமெரிக்க அணி தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து போஸ்னியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

4-வது வீரர் பாலோகன்

உலகக் கோப்பையில் கோல் அடித்த பிறகு ரெட் கார்டு பெற்று வெளியேறிய 4-வது வீரர் என்ற தேவையற்ற சாதனையை அமெரிக்காவின் ஃபொலாரின் பாலோகன் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸின் ஜினெடின் ஜிடேன் இந்த முறையில் வெளியேறியிருந்தார். போஸ்னியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரெட் கார்டு பெற்ற ஃபொலாரின் பாலோகன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பெல்ஜியம் அணிக்கு எதிராக களமிறங்க முடியாது.

SCROLL FOR NEXT