மொன்டெர்ரி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவின் மொன்டெர்ரியில் உள்ள எஸ்டாடியோ மைதானத்தில் நேற்று ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவீடன் - துனீசியா அணிகள் மோதின.
7-வது நிமிடத்தில் சுவீடன் முதல் கோலை அடித்தது. லிண்டெலோஃப் நடுப்பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை துனீசிய கோல்கீப்பர் சமாக் தனது இடத்தை விட்டு தாண்டி வெகுதூரம் முன்னேறி வந்து தடுக்க முயன்றார். ஆனால் பந்தை அவர், சரிவர தடுக்கவில்லை. இதனால் அருகில் நின்ற விக்டர் கியோகெரெஸ் தனது வலுவான ஷாட் வாயிலாக கோல் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் கோல் வலையின் முன் நின்ற துனீசிய டிஃபெண்டர் தால்பி அதைத் தடுத்தார்.
தால்பி மீது பட்டு திரும்பி வந்த பந்தை யாசின் அயாரி அற்புதமாக கட்டுப்படுத்தி மின்னல் வேகத்தில் உதைக்க பந்து கோல் வலையின் மேல் கார்னரை துளைத்தது. இதனால் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 30-வது நிமிடத்தில் சுவீடன் 2-வது கோலை அடித்தது. விக்டர் கியோகெரெஸ் உதவியுடன் பந்தை பெற்ற அலெக்சாண்டர் இசாக், இடது புறத்தில் தாழ்வாக அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
43-வது நிமிடத்தில் துனீசியா அணி தனது முதல் கோலை அடித்தது. துனீசியா அணியின் வீரர் ஹன்னிபால் மெஜ்ப்ரி அடித்த கிராஸை பெற்ற ஒமர் ரெகிக் தலையால் முட்டி கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் சுவீடன் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 59-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்கு முன்னதாக துனீசியாவின் எலியாஸ் ஸ்கிரி, சுவீடன் வீரர் அலெக்சாண்டர் இசாக்கிடம் பந்தை பறிகொடுத்தார்.
பந்தை தட்டிப்பறித்த இசாக் சமயோசிதமாகச் செயல்பட்டு அருகில் நின்ற விக்டர் கியோகெரெஸிடம் தட்டிவிட்டார். அதை வாங்கிய கியோகெரெஸ், மின்னல் வேகத்தில் கோல் வலைக்குள் திணித்தார். இதனால் சுவீடன் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 84-வது நிமிடத்தில் மத்தியாஸ் ஸ்வன்பெர்க்கும், காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 6-வது நிமிடத்தில் யாசின் அயாரியும் கோல் அடிக்க சுவீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஆரவாரம் செய்யாத அயாரி
துனீசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுவீடன் அணியின் யாசின் அயாரி 2 கோல்கள் அடித்து அசத்தினார். யாசின் அயாரியின் தந்தை துனீசியா நாட்டைச் சேர்ந்தவர். இதற்கு மதிப்பு அளிக்கும் வகையில் முதல் கோலை அடித்ததும் அதனை யாசின் அயாரி பெரிய அளவில் ஆரவாரம் செய்து கொண்டாடவில்லை.