விளையாட்டு

கடைசி நிமிடத்தில் விஏஆர் சர்ச்சை: குரோஷியாவை வீழ்த்தியது போர்ச்சுகல் | FIFA WC 2026

2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி

செய்திப்பிரிவு

டொராண்டோ: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று கனடா​வின் டொராண்​டோ​வில் நடை​பெற்ற நாக் அவுட் சுற்று ஆட்​டத்​தில் போர்ச்சுகல் - குரோஷியா அணி​கள் மோதின.

ஆட்​டத்​தின் தொடக்​கத்​தில் போர்ச்​சுகல் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்​பு​கள் கிடைத்​தன. ரஃபேல் லியோ மற்​றும் புரூனோ பெர்​னாண்​டஸ் ஜோடி குரோஷிய தற்​காப்பு அரணை சோதித்​தது. ஆனால் குரோஷிய கோல்​கீப்​பர் லிவகோ​விச் சிறப்​பாக செயல்​பட்​ட​தால் அந்த அணி கோல் வாங்​கு​வ​தில் இருந்து தப்​பித்​தது. முதல் பாதி ஆட்​டம் 0-0 என்ற நிலை​யில் இருந்​தது.

2-வது பாதி ஆட்​டம் தொடங்​கிய சில நிமிடங்​களி​லேயே குரோஷியா ஆதிக்​கம் செலுத்​தி​யது. 53-வது நிமிடத்​தில் குரோஷியா அணி​யின் வீரர் ஜோசிப் ஸ்டானிசிச், யாரும் மார்க் செய்​யப்​ப​டா​மல் இருந்த இவான் பெரிசிச்​சிக்கு பந்தை கிராஸ் செய்​தார். அதை அவர், கோல் கம்​பத்​தின் கீழ் கார்​னரை நோக்கி திணிக்க குரோஷியா 1-0 என முன்​னிலை பெற்​றது.

64-வது நிமிடத்​தில் போர்ச்​சுகல் அணிக்கு கார்​னர் கிக் கிடைத்தது. இதில் உதைக்​கப்​பட்ட பந்தை குரோஷியா டிஃபென்டர்​கள் தடுத்து வெளி​யேற்​றி​னர். ஆனால் அந்த நேரத்​தில் பாக்ஸ் பகு​திக்​குள் போர்ச்​சுகல் வீரர் ரெனாடோ வேகாவை, நிக்கோலா விளாசிச் பின்​னால் இருந்து இழுத்​தார். இதனால் போர்ச்​சுகல் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்​கப்​பட்​டது.

இதை பயன்​படுத்தி 41 வயதான நட்​சத்​திர வீர​ரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்​தார். உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்​றில் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ அடித்த முதல் கோல் இது​வாகும். அவர், அடித்த கோல் காரண​மாக ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது. 90 நிமிடங்​களின் முடி​விலும் இதே நிலையே இருந்​தது.

இதையடுத்து காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 4-வது நிமிடத்​தில் போர்ச்​சுகல் அணி​யின் ரஃபேல் லியோ​வின் துல்லியமான கிராஸை பெற்ற பதிலி வீர​ரான கோன்​சாலா ரமோஸ் தலை​யால் முட்​டிய​வாறு கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் போர்ச்​சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்​கில் முன்னிலை பெற்​றது.

தொடர்ந்து 13-வது நிமிடத்​தில் குரோஷியா அணி​யின் ஜோஸ்கோ கிவார்​டியோல் கோல் அடித்​தார். இதனால் போட்டி 2-2 என சமநிலையை எட்​டிய​தாக குரோஷியா அணி வீரர்​கள் கொண்டாடினர். ஆனால் நீண்ட நேரம் நீடித்த விஏஆர் பரிசீலனைக்​குப் பிறகு ஆஃப்​சைடு என நடு​வ​ரால் அறிவிக்கப்பட்டு கோல் மறுக்​கப்​பட்​டது. முடி​வில் போர்ச்​சுகல் 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது. இந்த சுற்​றில் போர்ச்​சுகல் அணி வரும்​ 6-ம்​ தேதி ஸ்பெ​யின்​ அணி​யுடன்​ பலப்பரீட்சை நடத்துகிறது.

SCROLL FOR NEXT