ஆர்லிங்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் நார்வே - ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. 39-வது நிமிடத்தில் நார்வே அணி முதல் கோலை அடித்தது. கேப்டன் மார்ட்டின் ஒடேகார்ட் கொடுத்த பாஸை பெற்று, ஆண்டோனியோ நுசா அடித்த கர்லிங் ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் நார்வே 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஐவரி கோஸ்ட் அணி 2-வது பாதி ஆட்டத்தில் பதிலடி கொடுத்தது. அமாத் தியாலோ, நிக்கோலஸ் பெபேயுடன் இணைந்து சாதுரியமான ஒன்-டூ ஆட்டத்தை விளையாடினார். பின்னர் நார்வேயின் மோலர் வுல்ஃப், பெர்க் ஆகியோரைத் தனது அலாதியான ட்ரிப்ளிங் திறமையால் ஏமாற்றி முன்னேறியபடி நிதானமாக நார்வே அணியின் கோல்கீப்பர் நைலாண்டைக் கடந்து பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
ஆட்டம் முடிவடைய 4 நிமிடங்களே இருந்த நிலையில் 86-வது நிமிடத்தில் நார்வே அணியின் ஆஸ்கார் பாப் பந்தை பாட்ரிக் பெர்க்கிற்கு பாஸ் செய்தார். அவர், மின்னல் வேகத்தில் ஐவரி கோஸ்ட் அணியின் 3 தடுப்பு வீரர்களை தாண்டி முன்னேறிய நிலையில் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலந்துக்கு தாழ்வாக கிராஸை வழங்கினார். அவர், அதை கச்சிதமாக கோல் வலைக்குள் திணிக்க நார்வே அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் வரை இந்த நிலையே நீடித்தது.
இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 6-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் வீரர் தியாலோ அடித்த நேர்த்தியான ஃப்ரீ-கிக்கை பந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து நார்வேயின் கோல்கீப்பர் ஒர்ஜன் கைலாண்ட் தட்டிவிட்டார். இதனால் கடைசி நேரத்தில் கோல் வாங்குவதில் இருந்து நார்வே தப்பித்தது. முடிவில் நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நுழைந்தது.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் நார்வே அணி நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நார்வே அணி வரும் 5-ம் தேதி, 5 முறை சாம்பியனான பிரேசிலுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நார்வே அணி கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. தற்போது 28 வருடங்களுக்கு பிறகு இரு அணிகளும் மோத உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.