விளையாட்டு

அமத் டயாலோவின் கடைசி நிமிட கோலால் ஐவரி கோஸ்ட் வெற்றி| FIFA WC 2026

1-0 என்ற கோல் கணக்கில் ஈக்வேடாரை சாய்த்தது

செய்திப்பிரிவு

பிலடெல்பியா: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் பிலடெல்​பியா நகரில் உள்ள லிங்​கன் ஃபைனான்​சி​யல் ஃபீல்டு மைதானத்​தில் நேற்று ‘இ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஐவரி கோஸ்ட் - ஈக்வேடார் அணி​கள் மோதின.

போட்​டி​யின் முதல் பாதி ஆட்​டம் ரசிகர்​களுக்கு அசாத்​தி​ய​மான விருந்​தாக அமைந்​தது. முதலில் ஈக்​வ​டார் அணி​யின் ஜான் எபோவா பெனால்டி பாக்​ஸிற்கு வெளியி​லிருந்து அடித்த அதிவேக ஷாட், துர​திர்​ஷ்ட​வச​மாக கோல்​கம்​பத்​தின் மேல் பட்டு திரும்பியது.

அதைத் தொடர்ந்து அந்த அணி​யின் பெட்ரோ விதே கொடுத்த துல்​லிய​மான பாஸைப் பெற்ற ஆலன் மிண்​டா​விற்கு கோல் அடிக்க பொன்​னான வாய்ப்பு கிடைத்​தது. கோல்​கீப்​பர் யாஹியா ஃபொஃ​பா​னாவை தாண்டி அவர் வளைத்து அடித்த ஷாட்​டும் கோல்​கம்​பத்​தில் பட்டு ஏமாற்​றம் அளித்​தது.

தொடர்ந்து ஐவரி கோஸ்ட் அணி​யின் யான் தியோமண்டே வலது பக்​க​வாட்​டில் மின்​னல் வேகத்​தில் புகுந்து தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்​படுத்​தி​னார். அதே​போல் அந்த அணி​யின் வீரர் பாசூமனா துரே அடித்த தாழ்​வான ஷாட்டை ஈக்​வ​டார் கோல் கீப்பர் ஹெர்​னான் கலின்​டெஸ் விரல் நுனி​யால் தடுத்​துக் காப்​பாற்​றி​னார்.

முதல் பாதி​யில் இரு அணி​களின் போராடிய போதி​லும் கோல் விழ​வில்​லை. இரண்​டாவது பாதி​யின் தொடக்​கத்​தி​லும் வாய்ப்புகள் குவிந்த வண்​ணம் இருந்​தன. ஈக்​வே​டாரின் எனர் வலென்​சியா குறுகிய கோணத்​திலிருந்து அடித்த ஷாட் கோல் கம்பத்​தில் மோதி​யது. அடுத்​த​தாக ஐவரி கோஸ்ட் அணி​யின் வீரர் வாஹி அடித்த ஷாட் துர​திர்​ஷ்ட​வச​மாக உயர​மாகச் சென்று கோல் கம்​பத்​தில் பட்​டுத் தெறித்​தது.

ஆட்​டத்​தின் பிற்​பகு​தி​யில் ஈக்​வ​டார் பின்​வாங்​கியதைத் தொடர்ந்து, பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்து ஆட்​டத்தை ஐவரி கோஸ்ட் முழு​மை​யாகக் கட்​டுப்​படுத்​தத் தொடங்​கியது. அவர்​களின் இந்​தத் தொடர் முயற்​சிக்கு ஆட்​டத்​தின் இறுதி நிமிடத்​தில் பலன் கிடைத்​தது.

90-வது நிமிடத்​தில் ஐவரி கோஸ்ட் அணி​யின் வீரர் சிங்கோ எந்தவொரு தடை​யும் இல்​லாமல் வலது பக்​க​வாட்​டில் மிக வேகமாக முன்​னேறிச் சென்று பாக்​ஸின் விளிம்பு பகு​தி​யில் இருந்து அடித்த பந்து பெனால்டி பாக்ஸ் பகு​திக்​குள் காத்​திருந்த பதிலி வீர​ரான அமத் டயாலோ வசம் சென்​றது. பந்தை பெற்ற அமத் டயாலோ, இடது காலால் அடித்த ஷாட், ஈக்​வே​டார் கோல்​கீப்​பர் ஹெர்​னான் கலின்​டெஸ் பாய்ந்து தடுத்​தும் கோல் வலைக்குள் புகுந்​தது.

இதனால் ஐவரி கோஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் முன்னிலை பெற்​றது. இதன் பின்​னர் காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 9 நிமிடங்​களில் ஈக்​வே​டார் அணியை பதிலடி கொடுக்க விடா​மல் பார்த்​துக் கொண்​டனர் ஐவரி கோஸ்ட் அணியின் வீரர்​கள். முடி​வில் ஐவரி கோஸ்ட் 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

12 வருடங்​களுக்கு பிறகு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றுள்ள ஐவரி கோஸ்ட் அணி தனது பயணத்தை வெற்​றி​யுடன் தொடங்கி உள்​ளது. ஐவரி கோஸ்ட் அணி தனது அடுத்த ஆட்டத்தில் 4 முறை சாம்​பி​யனான ஜெர்​மனி​யுடன் வரும் 20-ம் தேதி மோதுகிறது. அன்​றைய தினத்​தில் நடை​பெறும் மற்​றொரு ஆட்​டத்​தில்​ ஈக்​வே​டார்​ அணி, குரா​சாவோ அணி​யை சந்திக்கிறது.

22 மாதங்களில் முதல் தோல்வி

நடப்பு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஐவரி கோஸ்ட் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்வேடார் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் அந்த அணி கடந்த 19 போட்டிகளில் தோல்வி அடையாமல் வலம் வந்த சாதனை முடிவுக்கு வந்தது. ஈக்வேடார் அணி கடைசியாக 2024-ம் ஆண்டு செப்டம்பர் 6-ல் பிரேசில் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. இதன் பின்னர் 22 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஐவரி கோஸ்ட் அணியிடம் வீழ்ந்துள்ளது.

SCROLL FOR NEXT