பிலடெல்பியா: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரர் கிலியான் எம்பாப்பே கோலடித்து அசத்தினார்.
இந்தப் போட்டி பிலடெல்பியா மைதானத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்கியது. இரு அணி வீரர்களும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிராட்லி பர்கோலா, எதிரணி வீரரை தள்ளிவிட்டதற்காக மஞ்சள் அட்டையைப் பெற்றார். முதல் பாதி வரை இரு அணிகளுமே கோலடிக்கவில்லை.
2-வது பாதியில் பிரான்ஸ் அணி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடத் தொடங்கினர். ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸ் அணியின் மாற்று ஆட்டக்காரரான டெசிரே டோவ் பாக்ஸ் பகுதிக்கு பந்தைத் தடுக்க ஓடிச் சென்றபோது பராகுவே வீரர் டியாகோ கோமஸால் கீழே தள்ளி விடப்பட்டார். இதை கள நடுவர் விஏஆர் உதவியுடன் ஆய்வு செய்து பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் அணிக்கு வழங்கினார்.
இதையடுத்து அந்த பெனால்டி வாய்ப்பை அற்புதமான கோலாக்கினார் அணியின் நட்சத்திர வீரர் கிலியான் எம்பாப்பே. இதனால் 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. இறுதி வரை பராகுவே அணியால் கோலடிக்க முடியவில்லை. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் 2-வது கோலை அடிக்க பிரான்ஸ் வீரர்கள் முயன்றனர்.
ஆனால் பராகுவே அணியின் கோல்கீப்பர் ஓர்லாண்டே கில், அபாரமாக இரண்டு முறை பந்தைத் தடுத்து கோல் விழாமல் செய்தார். இறுதியில் 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கால் இறுதியில் மொராக்கோ அணியைச் சந்திக்கிறது பிரான்ஸ். இந்த ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெறவுள்ளது.
7-வது கோல்
இந்த உலகக் கோப்பை போட்டியில் தனது 7-வது கோலை அடித்து மிரட்டியுள்ளார் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியான் எம்பாப்பே. இதன்மூலம் இதே உலகக் கோப்பையில் 7 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கும் அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்ஸியுடன் (7 கோல்கள்) இணைந்துள்ளார் எம்பாப்பே.
மெஸ்ஸி, எம்பாப்பேவுக்கு அடுத்தபடியாக நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட், இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் ஆகியோர் தலா 5 கோல்களை அடித்துள்ளனர். செனகல் வீரர் இஸ்மாயிலா சார், ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஓயர்சபல், பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பலே, பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் தலா 4 கோல்களுடன் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளனர்.
இதனால் ஒரு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்ததற்காக தரப்படும் ‘கோல்டன் பூட்ஸ்’(தங்கக் காலணி) விருதைப் பெறுவதில் மெஸ்ஸியும், எம்பாப்பேவும் போட்டியில் உள்ளனர். கத்தாரில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் எம்பாப்பே 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட்ஸ் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் கிலியான் எம்பாப்பே 19-வது கோல்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் லயோனல் மெஸ்ஸி 20 கோல்களுடன் இருக்கிறார்.