அட்லாண்டா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா தனது ஆதிக்கத்தைத் தொடரும் நோக்கில் களமிறங்குகிறது. மறுபுறம், 1966-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் காத்திருக்கும் இங்கிலாந்து அணி இம்முறை அந்த வாய்ப்பை நனவாக்கும் உறுதியுடன் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
அர்ஜெண்டினா கால் இறுதி சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் பெற்ற வெற்றி, அந்த அணியின் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. இங்கிலாந்து அணியானது நார்வேக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் ஒழுங்கான அணிசேர்க்கையுடன் கட்டுப்பாடான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரை இறுதி ஆட்டத்தில் அனைவரது கவனமும் அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி மீது இருக்கக்கூடும். 39 வயதிலும் அணியின் தாக்குதல் ஆட்டத்தை வழிநடத்தி வரும் மெஸ்ஸி, தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்க விரும்புகிறார்.
அவருக்கு துணையாக ஜூலியன் ஆல்வரஸ், என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடப்பு தொடரில் 8 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, 2 கோல்கள் அடிக்க உதவி உள்ளார். லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்று ஆகியவற்றில் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி, கால் இறுதி சுற்றில் கோல் அடிக்கத் தவறினார். தனது கோல் வேட்டையை இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடரச் செய்வதில் லயோனல் மெஸ்ஸி தீவிரம் காட்டக்கூடும்.
இங்கிலாந்து தரப்பில் ஜூட் பெல்லிங்ஹாம், ஹாரி கேன், புக்காயோ சாகா மற்றும் டெக்லன் ரைஸ் ஆகியோரின் செயல்பாடு முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக பெல்லிங்ஹாமின் மிட்ஃபீல்டு ஆட்டமும், ஹாரி கேனின் கோல் அடிக்கும் திறனும் இங்கிலாந்தின் நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றன.
நட்சத்திர வீரர்கள் அர்ஜெண்டினா
லயோனல் மெஸ்ஸி
ஜூலியன் ஆல்வரஸ்
என்சோ பெர்னாண்டஸ்
லிசாண்ட்ரோ மார்டினஸ்
அரை இறுதியில் நுழைந்த விதம்
அர்ஜெண்டினா 3–0 அல்ஜீரியா
அர்ஜெண்டினா 2–0 ஆஸ்திரியா
அர்ஜெண்டினா 3–1 ஜோர்டான்
அர்ஜெண்டினா 3–2 கேப் வெர்டே
அர்ஜெண்டினா 3–2 எகிப்து
அர்ஜெண்டினா 3–1 சுவிட்சர்லாந்து
அரை இறுதியில் நுழைந்த விதம்
இங்கிலாந்து 4–2 குரோஷியா
இங்கிலாந்து 0–0 கானா
இங்கிலாந்து 2–0 பனாமா
இங்கிலாந்து 2–1 காங்கோ
இங்கிலாந்து 3–2 மெக்சிகோ
இங்கிலாந்து 2–1 நார்வே
நட்சத்திர வீரர்கள் இங்கிலாந்து
ஜூட் பெல்லிங்ஹாம்
ஹாரி கேன்
புக்காயோ சாகா
டெக்லன் ரைஸ்
விளையாடும் பாணி எப்படி?
அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்து தாக்குதலை உருவாக்கும் பாணியை கடைப்பிடிக்கிறார். அதேநேரத்தில், தாமஸ் டூகல் தலைமையிலான இங்கிலாந்து ஒழுங்கான பாதுகாப்பு, அதிவேக எதிர்தாக்குதல் மற்றும் செட்-பீஸ் வாய்ப்புகளை நம்பி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
‘‘கடவுளின் கை’’
அர்ஜெண்டினா – இங்கிலாந்து அணிகள் மோதல் என்றாலே உலகக் கோப்பை வரலாற்றில் பல மறக்க முடியாத தருணங்கள் உள்ளன. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டியாகோ மரடோனாவின் "கடவுளின் கை" கோலும், அதனைத் தொடர்ந்து அவர் அடித்த "நூற்றாண்டின் கோல்" எனப் போற்றப்படும் கோலும் இரு அணிகள் இடையிலான மோதலை உலகக் கால்பந்தின் மிகப்பெரிய ‘பகையாக’ மாற்றின. இதற்கு 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டேவிட் பெக்காம் அடித்த பெனால்டி கோலால் இங்கிலாந்து பழி தீர்த்ததும் இந்த மோதலின் முக்கிய அத்தியாயமாகும்.