விளையாட்டு

2 கோல்​கள் அடித்து ஜூட் பெல்லிங்ஹாம் அசத்தல்: கால் இறுதி​யில் நார்வேயை பந்தாடிய இங்கிலாந்து | FIFA WC 2026

செய்திப்பிரிவு

மியாமி: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் கால் இறு​தி​யில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்​கில் நார்வேயை பந்​தாடி அரை இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறியது. இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்​லிங்​ஹாம் சிறப்​பாக விளை​யாடி 2 கோல்​களை அடித்து அசத்​தல் சாதனை புரிந்​தார். அமெரிக்​கா​வின் மியாமி கார்​டன்​ஸிலுள்ள மியாமி மைதானத்​தில் நேற்று காலை இந்த கால் இறுதி ஆட்​டம் நடை​பெற்​றது.

இந்த கால் இறுதி ஆட்​டம் மிக​வும் பரபரப்​பாக அமைந்​திருந்​தது. ஆட்​டத்​தின் 36-வது நிமிடத்​தில் நார்வே வீரர் ஆண்ட்​ரி​யாஸ் ஷெஜெல்​டரப் ஒரு கோலடித்து அணிக்கு முன்​னிலை பெற்​றுத் தந்தார். நார்வே வீரர் எம்​.ஒடே​கார்ட் அழகாக கடத்​தித் தந்த கிராஸைப் பெற்ற ஆண்ட்​ரி​யாஸ் கோல் வலைக்​குள் திணித்து தனது அணி​யின் கோல் கணக்​கைத் தொடங்​கி​னார். நார்வே முன்னிலை பெற்​றதைத் தொடர்ந்து இங்​கிலாந்து வீரர்​கள் ஆக்ரோஷ​மாக விளை​யாடத் தொடங்​கினர்.

இதற்கு அடுத்த 11 நிமிடங்​களி​லேயே நல்ல பலன் கிடைத்​தது. 45+2-வது நிமிடத்​தில் ஜுட் பெல்​லிங்​ஹாம் கோலடித்து 1-1 என்ற கணக்​கில் சமநிலை பெறச் செய்​தார். இங்​கிலாந்து வீரர் ஏ.கார்​டன் கடத்​தித் தந்த பந்தை அழகான கோலாக மாற்​றி​னார் ஜூட் பெல்​லிங்​ஹாம். முதல் பாதி வரை 1-1 என்ற கணக்​கில் சமநிலை நீடித்​தது.

இரண்​டாவது பாதி​யில் இரு அணி வீரர்​களும் ஆக்​ரோஷத்​துடன் விளை​யாடி கோலடிக்க முயன்​றனர். ஆனால் இரு அணி வீரர்​களின் முயற்​சிக்​கும் பலன் கிடைக்​க​வில்​லை. 2-வது பாதி​யிலும் கோல் விழாத​தால் கூடு​தல் நேரம் தரப்​பட்​டது.

இந்த கூடு​தல் நேரத்​தின்​போது ஜூட் பெல்​லிங்​ஹாம் தனது 2-வது கோலை​யடித்து 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை பெறச் செய்​தார். 93-வது நிமிடத்​தில் இந்த கோல் விழுந்​தது. இதைத் தொடர்ந்து நார்வே வீரர்​கள் கோலடித்து சமநிலை பெறச் செய்ய போராடினர். ஆனால் அவர்​களது முயற்​சியை இங்​கிலாந்து கோல்​கீப்​பர் அற்​புத​மாக தடுத்​து​விட்​டார். ஆட்​டம் முடி​யும் வரை இதே நிலை நீடிக்​கவே 2-1 என்ற கணக்​கில் இங்​கிலாந்து வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது. வரும் 16-ம் தேதி நடை​பெறும்​ 2-வது அரை இறு​தி​யில்​ நடப்​புச்​ ​சாம்​பியன்​ அர்​ஜெண்​டி​னா​வுடன்​ இங்​கிலாந்​து மோதவுள்​ளது.

கேன், பெல்​லிங்​ஹாம் சாதனை

ஹாலண்​டுக்கு அடுத்​த​படி​யாக இங்​கிலாந்து வீரர்​கள் ஹாரி கேன், பெல்​லிங்​ஹாம் ஆகியோர் தலா 6 கோல் அடித்​துள்​ளனர். உலக கோப்​பை​யின் ஒரே தொடரில் ஒரே நாட்​டைச் சேர்ந்த இரு வீரர்​கள் தலா 6 கோல்​களை அடிப்​பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இங்​கிலாந்து புதிய சாதனை படைத்துள்​ளது. அதிக கோல்​கள் அடித்த வீரர்​களில் இரு​வரும் 3-வது இடத்​தில் உள்​ளனர்.

முடிவுக்கு வந்த ஹாலண்​டின் கனவு

கால் இறு​தி​யில் தோல்வி கண்​டதன் மூலம் கோல்​டன் பூட் விருதை வெல்​லும் நார்வே வீரர் எர்​லிங் ஹாலண்​டின் கனவு முடிவுக்கு வந்​துள்​ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் நார்வே வீரர் எர்​லிங் ஹாலண்ட் மிகச்​சிறப்​பாக விளை​யாடி வந்​தார். இங்​கிலாந்​துக்கு எதி​ரான காலிறுதி ஆட்​டத்​திற்கு முன்​ன​தாக 7 கோல்​கள் அடித்து அதிக கோல்​கள் அடித்​தவர்​கள் பட்​டியலில் எம்​பாப்​பே, மெஸ்​ஸிக்கு அடுத்த இடத்​தில் இருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற கால் இறு​தி​யில், நார்வே அணி இங்​கிலாந்​திடம் தோல்வி கண்டு வெளி​யேறியது. இதனால் நட்​சத்​திர வீரர் எர்​லிங் ஹாலண்ட் கோல்​டன் பூட் விருதைப் பெறும் வாய்ப்பு முடிவுக்கு வந்​துள்​ளது. அவர் 7 கோல் அடித்து 2-வது இடத்​தில் உள்​ளார். இராக், செனகல் அணி​களுக்கு எதி​ராக தலா 2 கோலும், 2-வது சுற்​றில் ஐவரி கோஸ்ட்​டுக்கு எதி​ராக ஒரு கோலும், 2-வது சுற்​றில் பிரேசிலுக்கு எதி​ராக 2 கோலும் அடித்து இருந்​தார். 5 முறை சாம்​பிய​னான பிரேசிலை வெளி​யேற்​றிய அவர் இங்​கிலாந்​துக்கு எதி​ரான முக்​கிய​மான கால் இறு​தி​யில் கோல் அடிக்​காமல் ஏமாற்​றம் அடைந்​தார்.

SCROLL FOR NEXT