விளையாட்டு

ஈக்வடாரிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட ஜெர்மனி | FIFA WC 2026

செய்திப்பிரிவு

நியூ ஜெர்ஸி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஈக்வடார் அணி 2-1 என்ற கணக்கில் 4 முறை உலக சாம்பியனும், பலம் வாய்ந்த அணியுமான ஜெர்மனியை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தது.

நியூ ஜெர்ஸியிலுள்ள மெட் லைஃப் மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் ஈக்வடார் களமிறங்கியது. பலம்வாய்ந்த ஜெர்மனி அணியானது, ஈக்வடாரை எளிதில் வீழ்த்தும் என்று ரசிகர்கள் நம்பினர். எதிர்பார்த்தது போலவே ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே ஜெர்மனி வீரர் லெராய் சனே கோல் பதிவு செய்து அசத்தினார். இதனால் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றது.

ஜெர்மனி வீரர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் நில்சன் அங்குலோ ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலை பெறச் செய்தார். நில்சன் அங்குலோ கோலடிப்பதற்கு பெட்ரோ வைட் உதவினார். பெட்ரோ வைட் கடத்திக் கொண்டு வந்து தந்த பந்தை நில்சன் வேகமாக அடித்து கோல் வலைக்குள் செலுத்தினார்.

முதல் பாதி வரை 1-1 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது. ஆனால், 77-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கோன்சாலோ. ஈக்வடார் வீரர் கெவின் ரோட்ரிக்ஸ், கார்னரிலிருந்து உதைத்த பந்தை, கோல் வலைக்கு அருகிலிருந்த கோன் சாலோ, கோல்கீப்பரை ஏமாற்றி அற்புதமான வகையில் கோலாக்கினார்.

இதனால் 2-1 என்ற கணக்கில் ஈக்வடார் முன்னிலை பெற்றது. இதையடுத்து எஞ்சிய நேரத்தில் கோலடிக்க ஜெர்மனி வீரர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 2-1 என்ற கணக்கில் ஈக்வடார் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 2006-க்கு பிறகு நாக்-அவுட் சுற்றுக்கு அந்த அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.

ஈக்வடாரில் தேசிய விடுமுறை

உலகக் கோப்பை போட்டி யில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை ஈக்வடார் வீழ்த்தியதைக் கொண்டாடும் வகையில், அந்த நாட்டில் ஒரு நாள் விடுமுறையை அதிபர் நோபோவா அறிவித்துள்ளார். ஜெர்மனிக்கு எதிரான பிரம்மாண்ட வெற்றியை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருடன் கொண்டாட்டம்

ஜெர்மனிக்கு எதிரான வெற்றியை, ஈக்வடார் நாட்டு பயிற்சியாளர் செபாஸ்டின் பிகாசி, கேலரிபகுதிக்குச் சென்று தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். ஆட்டம் முடிந்ததும், பயிற்சியாளர் செபாஸ்டின் பிகாசி மைதானத்தில் இருந்த தனது குடும்பத்தினர் இருந்த கேலரியை நோக்கி வேகமாக ஓடிச்சென்றார்.

மைதானத்திலிருந்து கேலரிக்கு கம்பிகள் வழியாக ஏறிச் சென்று குடும்பத்தினரை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஈக்வடாரின் வெற்றியை பயிற்சியாளர் தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT