மெக்சிகோ சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மெக்சிகோ சிட்டியில் உள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ‘கே’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள கொலம்பியா, 50-வது இடத்தில் உள்ள அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
40-வது நிமிடத்தில் கொலம்பியா அணி முதல் கோலை அடித்தது. உஸ்பெகிஸ்தான் அணியின் பின்வரிசை பாதுகாப்பு அரணைத் தாண்டி லூயிஸ் டயஸ் கொடுத்த துல்லியமான பாஸை பாக்ஸ் பகுதிக்குள் 6 அடி தூரத்தில் பெற்ற டேனியல் முனோஸ் லாவகமாகத் தட்டிவிட்டு கோலாக்கினார். இதனால் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
60-வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணி பதிலடி கொடுத்தது. பதிலி வீரரான காம்தாமோவ் வேகமாக வந்த பந்தை மைதானத்துக்கு வெளியே செல்ல விடாமல் தடுத்து, அதை மீண்டும் பெனால்டி பகுதிக்குக் குறுக்கே தூக்கி அடித்தார். அதை ஷோமுரோடோவ் இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் கொலம்பியா அணியின் கோல்கீப்பர் வர்காஸ் அதைத் தடுத்து நிறுத்த முயன்றும் பந்து கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது.
அப்போது அங்கு நுழைந்த ஃபைசுல்லேவ் யாரும் இல்லாத காலி கோல்போஸ்ட்டிற்குள் பந்தைத் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. உஸ்பெகிஸ்தான் அணியின் சமநிலை மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கொலம்பியா உடனடியாகப் பதிலடி கொடுத்து மீண்டும் முன்னிலை பெற்றது.
65-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் கஸ்தவா புவேர்ட்டா தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு பந்தைக் கடத்தி டேனியல் டயஸிடம் சேர்க்க, பெனால்டி பாக்ஸிற்குள் சற்று உள்ளே நின்றிருந்த அவர், தாழ்வான ஷாட் மூலம் கோலாக மாற்றினார். இதனால் கொலம்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
90 நிமிடங்களின் முடிவில் கொலம்பியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 9-வது நிமிடத்தில் குச்சோ ஹெர்னாண்டஸ் பந்தை அற்புதமாகத் தன்வசப்படுத்தி, பதிலி வீரர் ஜமிண்டன் காம்பாஸுக்குக் கிராஸ் செய்ய, அவர் அதைத் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார். முடிவில் கொலம்பியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா 3 புள்ளிகளுடன் ‘கே’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்த பிரிவில் போர்ச்சுகல் - காங்கோ அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. கொலம்பியா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி காங்கோ அணியுடன் மோதுகிறது. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான், போர்ச்சுகலுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.