லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கனடா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
22-வது நிமிடத்தில் கனடா அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஸ்டீபன் யுஸ்டாக்கியோ ஃபிரீ-கிக் மூலம் உதைத்த பந்து 6 அடி தூர பாக்ஸ் பகுதிக்குள் எதிரணியால் மார்க்கிங் செய்யப்படாமல் தனியாக நின்ற டெரெக் கார்னிலியஸுக்கு சென்றது. அவர், தலையால் முட்டிய பந்து தரையில் பட்டு நேராக கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸிடம் தஞ்சம் அடைந்தது.
முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் செட்-பீஸ்கள் மூலம் கனடாவுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைத்தன. அடுத்தடுத்து இலக்கை நோக்கி வந்த பந்துகளில் ஒன்றைத் தென் ஆப்பிரிக்காவின் மோடிபா தடுத்து வெளியேற்றினார். இதன் பின்னர் கனடா அணியின் பொம்பிம்பிட்டோ தலையால் முட்டிய பந்தையும், அதைத் தொடர்ந்து புக்கானன் மிக அருகிலிருந்து அடித்த ஷாட்டையும் கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸ் அபாரமாகத் தடுத்தார்.
45+2-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் குலிசோ முடாவ், ரிச்சி லாரியாவை ஃபவுல் செய்ததாக கனடாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் விஏஆர் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த முடிவு ரத்து செய்யப்பட்டது. முதல் பாதியில் கனடாவின் இடைவிடாத தாக்குதல்களைச் சமாளித்த தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தை 0-0 என சமநிலையில் வைத்திருந்தது.
முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியும் வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியாததால் கனடா ஏமாற்றமடைந்தது. 2-வது பாதியிலும் இதே நிலைதான் நீடித்தது. கனடா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, அழுத்தத்தை அதிகரித்தது. 66-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கோல் அடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த அணியின் வீரர் மில்லர் நடுக்கோட்டைத் தாண்டி ஒலிவாசெயீயிடம் பந்தை லாவகமாகத் தள்ள அவர், பந்தை மின்னல் வேகத்தில் கடத்திச் சென்று இடது காலால் இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். அதை கோல்கீப்பர் வில்லியம்ஸ் தனது தோள்பட்டையால் அசாத்தியமாகத் தடுத்தார். அவர், மீது பட்டு திரும்பி வந்த பந்தை கனடாவின் ஜோனாதன் டேவிட் கோல் அடிக்க முற்பட்டபோது, தென் ஆப்பிரிக்க டிஃபென்ஸ் வீரர் எம்போகாசி குறுக்கே வந்து பந்தைக் கார்னருக்கு தட்டிவிட்டு கோலைத் தடுத்து நிறுத்தினார்.
75-வது நிமிடத்தில் கனடா அணியின் நட்சத்திர வீரரான அல்போன்சோ டேவிஸ் பதிலி வீரராக களமிறங்கினார். களம் இறங்கிய உடனே அல்போன்சோ டேவிஸ் மிகச்சிறந்த பாஸை வழங்கி, பிராமிஸ் டேவிட்டுக்கு கோல் அடிப்பதற்கான பொன்னான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், பிராமிஸ் டேவிட் பந்தை கோல் போஸ்ட்டிற்கு வெளியே அடித்து வாய்ப்பை வீணடித்தார்.
90 நிமிடங்கள் வரை இரு அணிகளின் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+2-வது நிமிடத்தில் வலது பக்கவாட்டில் இருந்து கனடா அணியின் வீரர் அலிஸ்டர் ஜான்ஸ்டன் பாக்ஸ் பகுதிக்குள் கொடுத்த தொலைதூர பாஸை தென் ஆப்பிரிக்க அணியின் டிஃபெண்டர் தலையால் முட்டி பெனால்டி பாக்ஸின் வெளிப்பகுதிக்கு தட்டிவிட்டார்.
ஆனால் பந்து நேராக அங்கே தனியாக நின்றுகொண்டிருந்த கனடா அணியின் நடுகள வீரரான ஸ்டீபன் யுஸ்டாக்கியோ வசம் சென்றது. அவர், பந்தை நெஞ்சால் கட்டுப்படுத்தி, கீழே ஒருமுறை பவுன்ஸ் ஆகவிட்டு, லாவகமாக உதைத்து கோல் வலையின் கீழ் கார்னருக்குள் திணித்தார். இதை தென் ஆப்பிரிக்க அணியின் கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸால் தடுக்கமுடியாமல் போனது.
இதனால் கனடா 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் எஞ்சிய 5 நிமிடங்களில் தென் ஆப்பிரிக்க அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் கனடா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 16 அணிகள் பங்கேற்கும் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடா அணி ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள கனடா அணி இந்த சுற்றில் வரும் 4-ம் தேதி நெதர்லாந்து அல்லது மொராக்கோவுடன் பலப்பரீட்சை நடத்தும்.
‘குழந்தைகளுக்கான ஹீரோக்கள்’
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்றதும் கனடா கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜெஸ் மார்ஷ் தனது அணி வீரர்களின் மத்தியில் பேசும்போது, ” கால்பந்து விளையாட்டை விளையாடும் கனடா நாட்டின் எதிர்காலக் குழந்தைகளுக்கான ஹீரோக்கள் நீங்கள்தான். உங்களால் கால்பந்து விளையாட்டுக்கு இங்கே பெரிய எதிர்காலம் இருக்கிறது.
இந்த ஆட்டத்தை நினைத்து நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்ள வேண்டும். நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சில வாய்ப்புகள் கிடைத்தபோது, நாம் ஒரு கோல் அடித்திருந்தால் நம்முடைய வேலையை இன்னும் சற்று எளிதாக்கியிருக்கலாம். ஆனால், இந்த கோல் அடிக்கப்பட்ட கடைசி நிமிட நேரம், இந்த வெற்றியை நம்பமுடியாத அளவுக்கு விறுவிறுப்பானதாக மாற்றியுள்ளது. இது கனடாவில் ஏற்படுத்தப்போகும் தாக்கமும், மக்களுக்கு அளிக்கப்போகும் ஊக்கமும் அளப்பரியதாக இருக்கும்” என்றார்.
‘நம்பிக்கையை கைவிடவில்லை’
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கோலை அடித்த கனடா அணியின் வீரர் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ கூறும்போது, “நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடவில்லை. மேலும் இந்த கோல் உண்மையில் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒன்றுதான்.
இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம்.சிறந்த அணியை நாங்கள் கொண்டுள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகப் போராடும்போதும், ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் விளையாடும்போதும், இதுபோன்ற சிறப்பான விஷயங்கள் நடக்கும். நான் அளவில்லா மகிழ்ச்சியில் இருக்கிறேன். அதே நேரத்தில் எங்களுடைய வேலை இத்துடன் முடிந்துவிடவில்லை” என்றார்.
5 முறை தடுத்த வில்லியம்ஸ்
கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கோல்கீப்பர் வில்லியம்ஸ் ஐந்து முறை கோல் விழாமல் தடுத்தார். அந்த அணி கடைசி நிமிடங்கள் வரை மன உறுதியுடன் போராடியது. தற்காப்பு ஆட்டத்தில் மிகவும் வலுவாக இருந்த தென் ஆப்பிரிக்கா, இலக்கை நோக்கி ஒரே ஒரு ஷாட் மட்டுமே அடித்திருந்த போதிலும், எதிரணியை மிரட்டும் வகையிலான சில அருமையான கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் அவை முழுமை பெறவில்லை. இறுதி நிமிடங்களில் செய்த தவறு காரணமாக தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை பறிகொடுத்தது.