விளையாட்டு

36 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரியா வெற்றி | FIFA WC 2026

செய்திப்பிரிவு

சான்பிரான்ஸிகோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள லெவிஸ் மைதானத்தில் நேற்று ‘ஜே’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா, அறிமுக அணியான ஜோர்டானுடன் மோதியது. இதில் ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆஸ்திரியா அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1990-ல் இத்தாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது.

ஜோர்டான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரியா அணி தரப்பில் 21-வது நிமிடத்தில் ரோமானோ ஷ்மிட் கோல் அடித்து அசத்தினார். 76-வது நிமிடத்தில் ஜோர்டான் அணியின் யாசான் அல்-அரப் சுய கோல் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+12-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை மார்கோ அர்னாடோவிச் கோலாக மாற்றினார். ஜோர்டன் அணி தரப்பில் அலி ஆல்வன் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

SCROLL FOR NEXT