விளையாட்டு

மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் சாதனையுடன் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி | FIFA WC 2026

3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது

செய்திப்பிரிவு

கன்சாஸ் சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் உள்ள ஆரோஹெட் மைதானத்தில் நேற்று ‘ஜே‘ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, அல்ஜீரியாவுடன் மோதியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அர்ஜெண்டினாவின் நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்தார். ஆனால் வலது அது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. அதே போல் அல்ஜீரியா வீரர் ஃபரேஸ் சைபி அடித்த கோலும் ஆஃப் சைடினால் பறிபோனது.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா முதல் கோலை அடித்தது. மைதானத்தின் மையப்பகுதியில் அர்ஜெண்டினா அணிக்கு ஃப்ரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது. அல்ஜீரிய அணியின் டிஃபெண்டர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்குள், அர்ஜெண்டினாவின் ரோட்ரிகோ டி பால் சாமர்த்தியமாக பந்தை லயோனல் மெஸ்ஸியை நோக்கி தட்டிவிட்டார்.

மெஸ்ஸி பந்தை தனது முழுக் கட்டுப்பாட்டில் அடித்த வலுவான ஷாட் அல்ஜீரிய கோல்கீப்பர் லூகா ஜிடேன் பாய்ந்து தடுத்தும் கோல் வலையை துளைத்தது. இதனால் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 60-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் மெக் அலிஸ்டர் தூரத்தில் இருந்து இலக்கை நோக்கி வலுவான ஷாட்டை அடித்தார்.

அல்ஜீரிய கோல்கீப்பர் லூகா ஜிடேன் அதைத் தடுக்க முற்பட்டார். ஆனால் பந்து அவரது கைகளில் சரியாக சிக்காமல் நழுவியது. அப்போது அருகில் நின்ற மெஸ்ஸி சமயோசிதமாக செயல்பட்டு பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 76-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

மெஸ்ஸி மைதானத்தின் நடுப்பகுதியில் இருந்து பந்தை கடத்திச் சென்று அல்ஜீரியாவின் பகுதிக்குள் ஆக்ரோஷமாக முன்னேறினார். அல்ஜீரிய டிஃபெண்டர்கள் அவரைத் தடுக்க முயன்றபோது, பந்தை இடதுபுறத்தில் நின்றுகொண்டிருந்த நிக்கோலஸ் கோன்சாலஸை நோக்கி சாதுரியமாகத் தட்டிவிட்டார் மெஸ்ஸி.

பந்தைப் பெற்றுக்கொண்ட கோன்சாலஸ், ஒரே தொடுதலில் அதை மீண்டும் மெஸ்ஸிக்கே பாஸ் செய்தார். சரியான கோணத்துக்காக சற்று நகர்ந்த மெஸ்ஸி, பந்தை தனது இடது காலுக்கு மாற்றி, அல்ஜீரிய கோல்கீப்பர் லூகா ஜிடேன் காற்றில் பாய்ந்தும் எட்ட முடியாதபடி ஒரு அபாரமான கர்லிங் ஷாட் மூலம் பந்தை கோல் வலையினுள் திணித்தார்.

அல்ஜீரியா அணி கடைசி வரை போராடிய போதிலும் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் அர்ஜெண்டின அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது.

மெஸ்ஸியின் சாதனை பட்டியல்

* அர்ஜீரியாவுக்கு எதிராக அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி அடித்த 3 கோல்களால், உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் சாதனையான 16 கோல்களை சமன் செய்தார்.

* உலகக் கோப்பை தொடரில் லயோனல் மெஸ்ஸி பதிவு செய்த முதல் ஹாட்ரிக் இதுவாகும். அதேவேளையில் சர்வதேச கால்பந்து அரங்கில் அவரது 11-வது ஹாட்ரிக் ஆகும்.

* உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த அதிக வயதுடைய வீரர் என்ற புதிய சாதனையையும் மெஸ்ஸி (38 வயது, 357 நாட்கள்) படைத்துள்ளார். இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்பெயின் அணிக்கு எதிராக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரெனால்டோ (33 வயது 130 நாட்கள்) ஹாட்ரிக் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.

*அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டி மெஸ்ஸிக்கு 200-வது சர்வதேச ஆட்டமாகவும் அமைந்தது. அதோடு உலகக் கோப்பை வரலாற்றில் ஆறு தொடர்களில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

*அல்ஜீரியாவுக்கு எதிரான வெற்றியில் உலகக் கோப்பை தொடர்களில் அதிக வெற்றி களைப் பெற்ற வீரர்கள் பட்டியலிலும் மெஸ்ஸி, ஜெர்மனி வீரர் குளோஸுடன் இணைந்து 17 வெற்றிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT