விளையாட்டு

ஜோர்டானை வெளியேற்றியது அல்ஜீரியா | FIFA WC 2026

செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: உல​கக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் சான் பிரான்​சிஸ்கோ பே ஏரி​யா​வில் உள்ள லெவிஸ் மைதானத்​தில் நேற்று ‘ஜே’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்டத்​தில் ஜோர்டான் - அல்ஜீரியா அணி​கள் மோதின. 36-வது நிமிடத்​தில் அறி​முக அணி​யான ஜோர்​டான் தனது முதல் கோலை அடித்​தது.

முசா அல் தமாரி உதவி​யுடன் பந்தை பெற்ற நிஷார் அல் ரஷ்​தான் இந்த கோலை அடித்​தார். இதனால் ஜோர்​டான் 1-0 என முன்னிலை பெற்​றது. 69-வது நிமிடத்​தில் அல்ஜீரியா பதிலடி கொடுத்​தது. ரியாத் மஹ்ரெஸ் கார்​னரில் இருந்து அடித்த பந்தை பதிலி வீரரான நாதிர் பென்​பு​வாலி தலை​யால் முட்டி கோல் வலைக்​குள் திணித்​தார்.

இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்டியது. 82-வது நிமிடத்​தில் அல்​ஜீரியா வீரர் ஹாட்ஜ் மூசா கார்னரில் இருந்து உதைத்த பந்தை 6 அடி தூர பாக்​ஸிற்​குள் பெற்ற அமீன் குயிரி கோலாக மாற்​றி​னார். இதனால் அல்ஜீரியா 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. இதன் பின்​னர் கடைசி வரை போராடி​யும் ஜோர்​டான் அணி​யால் மேற்​கொண்டு கோல் அடிக்க முடிய​வில்​லை. முடி​வில் அல்​ஜீரியா 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

2014-ம் ஆண்டு தொடருக்கு பின்​னர் அல்​ஜீரியா அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது​வாகும். 2014-ம் ஆண்டு தொடரில் அல்ஜீரியா லீக் சுற்​றில் தென் கொரி​யாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்​தி​யிருந்​தது. உலகக் கோப்பை வரலாற்​றில், எதிரணி​யிடம் முதல் கோலை வாங்​கிய பின்​னர் அல்ஜீரியா அணி ஒரு போட்​டி​யில் வெற்றி பெறு​வது இதுவே முதல் முறை​யாகும்.

இதற்கு முன்​ன​தாக இத்​தகைய சூழ்​நிலைகளில் விளை​யாடிய போட்​டிகளில் அல்​ஜீரியா அணி 7 தோல்வி​களை​யும், 2 டிராக்களை​யும் பதிவு செய்​திருந்​தது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் 3 புள்​ளி​களை பெற்​றுள்ள அல்​ஜீரியா நாக் அவுட் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் வரும் 27-ம் தேதி ஆஸ்திரியாவுடன் மோதுகிறது.

இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் அல்​ஜீரியா நாக் அவுட் சுற்​றில் கால்​ப​திக்க வாய்ப்பு உள்​ளது. அதேவேளை​யில் 2-வது தோல்வியை சந்​தித்த ஜோர்​டான் நாக் அவுட் சுற்​றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்​தில் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்​திருந்​தது. ஜோர்​டான் தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது. இந்​த ஆட்​டம்​ வரும்​ 27-ம்​ தேதி நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT