விளையாட்டு

பிரபல கால்பந்து அணியின் பயிற்சியாளர் கம்யூ. ஆட்சியில் ‘ரகசிய போலீஸ்’ ஆக இருந்தது அம்பலம்!

ஆர்.முத்துக்குமார்

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் பிரபல கால்பந்து கிளப் அஜாக்ஸ். இதனை ஏ.எஃப்.சி. அஜாக்ஸ் என்றும் அழைப்பார்கள். 1970-ம் ஆண்டுகளில் அஜாக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணியை தொடர்ந்து இரண்டு முறை ஐரோப்பியக் கோப்பை வெற்றிக்கு வழிநடத்திய புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் ஸ்டெஃபன் கோவாக்ஸ், ருமேனியாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் ரகசிய போலீஸ் அமைப்பான ‘செக்யூரிடேட்’ (Securitate) அமைப்புக்கு உளவாளியாக செயல்பட்டதாக புதிய ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

ருமேனிய விளையாட்டு நாளிதழான Gazeta Sporturilor நடத்திய விசாரணையில், 1955 முதல் 1963 வரை கோவாக்ஸ் “வசைல் முன்டேனு” என்ற புனைப் பெயரில் உளவாளியாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த தகவல்கள் ரகசிய காவல் ஆவண ஆய்வு அமைப்பு (CNSAS) காப்பகத்தில் உள்ள 31 பக்க கோப்பில் பதிவாகியுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

          

1955 அக்டோபர் 28 அன்று, கிளுஜ் நகரில் பயிற்சியாளராக இருந்தபோது, அரசு விரோத செயல்கள் குறித்த தகவல்களை வழங்குவதாக கோவாக்ஸ் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தார். “ருமேனிய மக்கள் குடியரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அறிந்த அனைத்தையும் உடனடியாக தெரிவிப்பேன்” என அவர் கூறியிருந்தார்.

முழு ரகசியத்தை காக்க ஒப்புக்கொண்ட அவர், ஏதும் பணம் பெற மறுத்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்ல முயன்ற விளையாட்டு வீரர்கள் குறித்த தகவல்களுக்காக அவர் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓர் அறிக்கையில், புகழ்பெற்ற ருமேனிய கால்பந்து வீரர் எமெரிக் ஜெனெய் குறித்த தகவலை கோவாக்ஸ் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது பழைய விரோதம் காரணமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 1963-ல் அவர் புக்கரெஸ்ட் நகருக்கு மாற்றப்பட்டதால், தொடர்ந்து சந்திப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்த ஆண்டே ரகசிய காவல் அமைப்பு அவரை தகவலாளராக இருந்து விலக்கிக் கொண்டது.

இதன் பின்னரே கோவாக்ஸ் கால்பந்தில் உச்ச வெற்றிகளை பெற்றார். 1968: ஸ்டேயுவா புக்கரெஸ்ட் அணியுடன் ருமேனிய லீக் வெற்றி 1972 மற்றும் 1973-ல் அஜாக்ஸ் அணியுடன் தொடர்ந்து இரண்டு ஐரோப்பியக் கோப்பைகள்; 3 டச்சு லீக் பட்டங்கள் பின்னர் பிரான்ஸ் தேசிய அணி, பனாதினைகோஸ், மோனாக்கோ போன்ற அணிகளையும் பயிற்றுவித்தார் 1995-ல், 74 வயதில் அவர் கிளுஜ் நகரில் காலமானார்.

இந்த ஆவணங்கள் கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் விளையாட்டு உலகம் எவ்வாறு அரசியல் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

SCROLL FOR NEXT