பாகிஸ்தான் - நெதர்லாந்து இடையே கொழும்புவில் நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் கடைசியில் நெதர்லாந்து வெற்றியைப் பறித்த கேட்சை விட்ட மாக்ஸ் ஓதவ்த் என்ற வீரர் இந்தியா-பாகிஸ்தான் பகைமையின் முழு வசையையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
காரணம், அவர் அன்று பாகிஸ்தானுக்காக போட்டியை வென்று கொடுத்த ஃபாஹிம் அஷ்ரபுக்கு கையில் வந்த எளிதான கேட்சை நழுவ விட்டார் இதனையடுத்து போட்டியையும் நெதர்லாந்து தவற விட்டது.
18 பந்துகளில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில் அற்புதமான ஒரு ஓவரினால் 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்று பாகிஸ்தான் தோல்வி முகம் காட்டியது. அப்போது வான் பீக் வீசிய அந்தப் பந்தை ஃபாஹிம் அஷ்ரஃப் தூக்கி அடிக்க லாங் ஆஃபில் கையில் வந்து உட்கார்ந்த கேட்சைத் தரை தட்டவிட்டார் ஓதவ்த். அடுத்த 4 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி என்று பாஹிம் அஷ்ரப் பாகிஸ்தானை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து கடைசி ஓவரில் வெற்றியையும் சாதித்தார்.
இதனையடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகத் தளங்களில் நெதர்லாந்து அணியை குறிப்பாக ஓதவ்த் விட்ட கேட்சை குறிப்பாக இந்திய ரசிகர்கள் வசைமாரி பொழிந்தனர்.
“நெதர்லாந்தின் ஹசன் அலி”, புரோ நீங்க ஒரு புரொபஷனல் பிளேயர் எப்படி எளிதான கேட்சை ட்ராப் செய்யலாம்? என்ற ஒரு வாசகரின் பதிவு மட்டும்தான் அச்சிற்குரியதாக இருந்தது, மீதி எல்லாம் கெட்ட வார்த்தை வசைமாரியாக இருந்தது.
மாக்ஸ் ஓதவ்த் மிரண்டு விட்டார். ஏனெனில் நெதர்லாந்து ரசிகர்களை விடவும் இந்திய ரசிகர்கள் கேட்ச் விட்டதை இவ்வளவு ஆக்ரோஷமாக எதிர்கொள்வார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை.
இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “சில கருத்துக்கள் உண்மையில் மிக மோசமானதாக இருந்தது. இப்படியெல்லாம் யாரும் யாரையும் சொல்லிவிடக்கூடாது. அப்படிப்பட்ட வசைகள் அவை. டச்சு ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள் என் மீது கடும் கோபமடைந்துள்ளனர்.
நாங்களும் போட்டி முடிந்தவுடன் நிறைய கலந்தாலோசித்தோம், நான் விட்ட கேட்ச் மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்களை நாங்கள் மேம்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும் இன்னும் முன்னேற்றம் தேவை. அது போன்ற கேட்ச்களை நான் ஆயிரம் முறை பிடித்திருக்கிறேன், அந்தக் கேட்சை விட்டதுதான் தப்பாகி விட்டது. மேட்சையே தோற்று விட்டோம்.” என்றார்.