விளையாட்டு

“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” - இந்திய அணி​யின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் நேற்று முன்​தினம் கொல்​கத்​தா​வில் நடைபெற்ற முக்​கிய​மான ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்னேறியது.

இந்த ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் விளாசிய 97 ரன்​கள் உதவி​யுடன் இந்​திய அணி 196 ரன்​கள் இலக்கை 4 பந்​துகள் மீதம் வைத்து வெற்றி கண்​டது. சூர்​யகு​மார் யாதவ் (18), திலக் வர்மா (27), ஷிவம் துபே (8) ஆகியோ​ரும் வெற்​றிக்கு தங்​களது பங்​களிப்பை வழங்​கினர்.

          

இந்​நிலை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: ஒவ்​வொரு பங்​களிப்​பைப் பற்​றி​யும் நீங்​கள் பேசுவது மகிழ்ச்​சி​யளிக்​கிறது, ஏனென்​றால் பல ஆண்​டு​களாக, நாம் ஒரு சில பங்​களிப்​பு​களைப் பற்றி மட்​டுமே பேசி வரு​கிறோம். கிரிக்​கெட் ஒரு குழு விளை​யாட்​டு, இது எப்​போதும் குழு விளை​யாட்​டாகவே இருக்​கும்.

என்னை பொறுத்​தவரை​யில் ஷிவம் துபே அடித்த 2 பவுண்​டரி​களும் சஞ்சு சாம்​சன் குவித்த 97 ரன்​களைப் போலவே முக்​கி​யம். ஏனென்​றால் ஷிவம் துபே அந்த இரண்டு பவுண்​டரி​களை​யும் அடிக்​க​வில்லை என்​றால், சஞ்சு சாம்​சன் 97 ரன்​கள் குவித்​தது குறித்து பேசவே மாட்​டீர்​கள்.

பெரிய பங்​களிப்பு தலைப்​புச் செய்​தி​களில் இடம்​பிடிக்​கிறது. சிறிய பங்​களிப்​பு, அணி வெற்றி பெற உதவும். வெற்றி கோட்​டைக் கடக்க உதவும் அந்தபங்​களிப்பும் மிக​வும் முக்​கிய​மானது. நான் இருக்​கும் வரை இது​தான் தத்​து​வ​மாக இருக்கும்.

டி20 கிரிக்​கெட் பயிற்சி முறை​களில் தரவு​களை நான் நம்​புவ​தில்​லை. அதை நான் பார்த்​த​தில்​லை. தரவு எதைப் பற்​றியது என்று கூட எனக்​குத் தெரி​யாது. ஏனென்​றால் பயிற்சி முறை​கள் என்​பது உள்​ளுணர்​வைப் பற்​றியது என்று நான் உணர்​கிறேன்.

டி20 கிரிக்​கெட் என்​பது உள்​ளுணர்​வைப் பற்​றியது. விளை​யாட்டு மற்​றும் டி 20 வடிவம் பற்றி எனக்கு என்ன அறிவு இருந்​தா​லும், அதை நான் கேப்​ட​னுக்​குக் கொடுக்க முயற்​சிக்​கிறேன், என்​னால் முடிந்​தவரை அவருக்கு உதவ முயற்​சிக்​கிறேன். ஆனால், இறுதி முடிவை எடுப்​பது கேப்​டன் தான்.

நேர்​மை​யாக கூறு​வதென்​றால் தரவு​களை நான் நம்​ப​வில்​லை, ஏனென்​றால் அது மிக​வும் மிகைப்​படுத்​தப்​பட்​ட​தாகும். என்​னைப் பொறுத்​தவரை, உலகத்​தரம் வாய்ந்த வீரர்​கள் எங்​களிடம் இருப்​பது எங்​களுக்கு மிக​வும் அதிர்​ஷ்டம் என்று நான் நினைக்​கிறேன்.

எங்​களிடம் வித்​தி​யாச​மாகப் பயன்​படுத்​தக்​கூடிய வீரர்​கள் உள்​ளனர், பல அணி​களுக்கு இந்த வசதி இல்​லை. ஜஸ்பி​ரீத் பும்ரா அல்​லது அர்​ஷ்தீப் சிங் அல்​லது வருண் சக்​ர​வர்த்தி போன்ற ஒரு​வரை ஆட்டத்தின் எந்த கட்​டத்​தி​லும் பயன்​படுத்​தலாம். பேட்​டிங் பார்​வை​யில், எங்​களிடம் வலிமை இருக்​கிறது. அது மிக​வும் முக்​கிய​மான ஒன்​று.

வலு இருக்​கும்​போது, ஒரு​போதும் இலக்கை துரத்​தும் போது விலகி இருக்க மாட்​டீர்​கள். ஒரு​போதும் விளை​யாட்​டிலிருந்து வெளி​யேற மாட்​டீர்​கள். அரை இறு​தி​யில் இங்​கிலாந்து அணியை எதிர்​கொள்​கிறோம். அவர்​கள் உலகத்​தரம் வாய்ந்த தரமான அணி. அவர்​களிடம் நிறைய தரமான வீரர்​கள் உள்​ளனர்.

மேலும் வான்​கடே மைதானம் கடின​மானது என்​பதை அனை​வருமே அறி​வார்​கள். நாங்​கள் அணிக்​காக​வும், நாட்​டுக்​காக​வும் ஏதாவது சிறப்​பாகச் செய்ய மற்​றொரு வாய்ப்பு கிடைக்​கும் என்று நம்​பு​கிறோம். சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​து​வோம் என்ற நம்​பிக்கை உள்ளது. இவ்​வாறு கவுதம் கம்​பீர் கூறி​னார்.

‘சஞ்சு உலகத் தரம் மிக்க வீரர்’

சஞ்சு சாம்​சன் குறித்து கவுதம் கம்​பீர் கூறும்​போது, “நியூஸிலாந்​துக்கு எதி​ரான டி 20 தொடர் சஞ்சு சாம்​சனுக்கு மிக​வும் கடின​மான​தாக அமைந்​தது. அதனால், சில நேரங்​களில் அவருக்கு ஓய்​வளிப்​பது மிக​வும் முக்​கிய​மாகத் தோன்​றியது. சஞ்சு சாம்​சனின் திறமையை நாங்​கள் அறிவோம்.

அவர், சர்​வ​தேச டி20 போட்​டிகளில் 3 சதங்​கள் விளாசி​யுள்​ளார். சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் நிறைய வீரர்​கள் 3 சதங்​கள் விளாசி​ய​தில்​லை. உலகக் கோப்​பைத் தொடரில் எங்​களுக்கு எப்​போது அவருடைய உதவி தேவைப்​படு​கிறதோ அப்​போது அவர் சிறப்​பாக செயல்​பட்டு அணிக்கு வெற்றி பெற்​றுத் தரு​வார் என்​பது எங்​களுக்​குத் தெரி​யும். சூப்​பர் 8 சுற்​றில் ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான போட்​டி​யில் அவர் சிறப்​பாக விளை​யாடி​னார்.

அந்த ஆட்​டத்​தில் இந்​திய அணிக்கு அதிரடி​யான தொடக்​கம் கிடைத்​தது.தற்​போது மீண்​டும் சிறப்​பாக செயல்​பட்டு ரன்​கள் குவித்​துள்​ளார். சஞ்சு சாம்​சன் தொடர்ச்​சி​யாக சிறப்​பாக விளை​யாட வேண்​டும் என்​ப​தையே நாங்​கள் எதிர்​பார்க்​கிறோம். அவர், ஆட்​டத்தை அதிரடி​யாக எடுத்​துச் செல்​ல​வில்​லை. மிக​வும் அமை​தி​யாக நேர்த்​தி​யான கிரிக்​கெட் ஷாட்​டு​களை மட்​டுமே விளை​யாடி​னார்​. சஞ்​சு சாம்​சன்​ உலகத்​ தரத்​திலான வீரர்​. அவரிடம்​ நிறைய திறமைகள்​ உள்​ளன” என்றார்.

SCROLL FOR NEXT