விளையாட்டு

பாகிஸ்தானின் சாதாரண மித வேகப்பந்து வீச்சாளர்களிடம் இங்கிலாந்து சரண்: லார்ட்ஸ் டெஸ்ட்

ஆர்.முத்துக்குமார்

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை 248 ரன்களுக்கு இழந்து பின்னடைவு கண்டுள்ளது. மணிக்கு 125-130 கிமீ வேகமே வீசும் பாகிஸ்தான் ஸ்விங் பவுலர்களான முகமது அப்பாஸ் மற்றும் முகமது அலி ஆகியோர் தங்களிடையே 7 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மழையினால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது, மேகமூட்டமான வானிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்விங் பவுலிங் சாதக சூழ்நிலைகள் இருந்தன. இதனை பாகிஸ்தான் பவுலர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டன. இருந்தாலும் பாஸ்பால் காலக்கட்ட வீரர்கள் இன்னமும் அணியில் நீடிக்கும் போது முகமது அப்பாஸ், முகமது அலி போன்ற சாதாரண மீடியம் பேஸ் பவுலர்களிடம் இங்கிலாந்து சரணடைவது அதன் பேட்டிங்கிலும் பல கோளாறுகள் இருப்பதையே பறைசாற்றுகின்றன.

மித வேகப்பந்து வீச்சுதான் பாகிஸ்தானின் பிரதான அட்டாக் ஆக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அதில் இங்கிலாந்து பேட்டர்கள் சரணடைவது அதை விட ஆச்சரியமாகவே உள்ளது. பெரும்பாலும் நேற்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஸ்பின்னர்களுக்கு நிற்பது போல் மித வேகப்பந்து வீச்சாளர்களான முகமது அப்பாஸ், முகமது அலிக்கும் ஸ்டம்புக்கு அருகிலேயே பின்னால் நின்று கீப்பிங் செய்ததைப் பார்க்க முடிந்தது. அதாவது பாஸ்பால் பூச்சாண்டியெல்லாம் இல்லாத காலக்கட்டத்தில் இருந்த கெவின் பீட்டர்சன் இருந்தால் இந்த மித வேகப்பந்து வீச்சை உண்மையில் போட்டு சாத்தி எடுத்திருப்பார்.

அதே போல் ஜானி பேர்ஸ்டோ போன்ற அதிரடி பேட்டர்களும் இத்தகைய பந்து வீச்சை அடித்து நொறுக்கியிருப்பார். மாறாக இங்கிலாந்து பாஸ்பாலுக்குப் பிந்தைய குழப்பவாத பேட்டிங்கில் சரிவு கண்டது.

இங்கிலாந்தின் சமீபத்திய களத்திற்கு வெளியேயான சர்ச்சை, வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸைச் சுற்றிய சர்ச்சைகள் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேப்டன் ஜோ ரூட்டின் மனநிலையை மேலும் சோர்வடையச் செய்யும் விதமாக, வியாழக்கிழமை அப்பாஸ் பந்துவீச்சில் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பென் டக்கெட் 17 ரன்களிலும், எமிலியோ கே 8 ரன்களிலும் அப்பாஸிடம் ஆட்டமிழந்தது இங்கிலாந்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அப்பாஸ் 4 விக்கெட்டுகளை 56 ரன்களுக்கு வீழ்த்திய நிலையில், அலி 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹாரி புரூக் 15, ஜேமி ஸ்மித் 61, ஆலி ராபின்சன் 0 ஆகியோரை அலி அற்புதமான மூன்று ‘இன்-கட்டர்’ பந்துகள் மூலம் வீழ்த்தினார்.

கேப்டன் பாபர் அசாம் மீண்டும் அணிக்குத் திரும்பிய நிலையில், கடந்த வாரம் ஹெடிங்லியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான், இம்முறை அதைவிட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இங்கிலாந்தின் கஸ் அட்கின்சனும் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடினார். ஆட்டம் மோசமான வெளிச்சம் காரணமாக உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.10 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நடுவர்கள் ஆட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டாம் என முடிவு செய்ததால், அட்கின்சன், ஜோஷ் டங் (1*) ஆகியோர் வெள்ளிக்கிழமை மீண்டும் களமிறங்க உள்ளனர்.

SCROLL FOR NEXT