பெரிய எதிர்பார்ப்புடன் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான பவுலிங் ஆல்ரவுண்டர் ஆலி ராபின்சன் 20 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகள் என்று அசத்தியபோதும், இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த தொடரில் இங்கிலாந்து 1-4 என்று டெஸ்ட்டில் உதை வாங்கிய பிறகே அணியிலிருந்து தூக்கப்பட்டார்.
அதாவது, இந்த பிரெண்டன் மெக்கல்லாம் - ராப் கீ - பென் ஸ்டோக்ஸ் கூட்டணி பேட்டிங்கில் அதிரடி என்றும், பவுலிங்கில் அதிவேகம் என்றும் இங்கிலாந்தின் போக்கை மாற்ற முயற்சித்தனர். ஆனால், பேட்டர்களோ 200 ரன்களுக்கு முக்கித் திணற, பவுலர்களோ பிட்சில் பந்தைக் குத்திக் குத்தி குழியாக்கி கொண்டிருந்தனர். இது ஆஷஸ் தொடரில் வாங்கிய 1-4 என்று உதைக்குப் பிறகே ஏற்பட்ட ஞானோதயம்.
அந்த ஞானோதயத்தின் முதல் பார்வை ஒதுக்கப்பட்ட ஸ்விங் பவுலிங் ஆல்ரவுண்டர் ஆலி ராபின்சன் மீது விழுந்து, அவரை மெக்கல்லம் இங்கிலாந்து கதவுகள் மூடப்படவில்லை; திறந்துதான் இருக்கிறது என்று டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் அழைப்பு விடுத்துள்ளதில் போய் முடிந்துள்ளது.
பரபரப்பு விரும்பியான மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அதிவேகப் பந்துவீச்சு என்று முதல் டெஸ்ட்டிலேயே டிராவிஸ் ஹெட்டிடம் காட்டடி வாங்கியது முன்னதாக ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட்டிடம் அடி வாங்கியது.
“மெக்கல்லம் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். இன்னும் கதவுகள் திறந்தேயிருக்கின்றன என்று சொல்லத்தான் அவர் மெசேஜ் செய்திருந்தார், அது எனக்கு ஆறுதல் அளித்தது. மேலும் ராபர்ட் கீயும் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘விக்கெட்டுகளைக் கைப்பற்று, கதவைத் தட்டு, உனக்கான இடம் உண்டு’ என்றார்” என்று ஆலி ராபின்சன் ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் புதிய பந்தில் கட்டுப்பாட்டுடன் வீசும் நம்பகமான பவுலர்கள் இல்லாமல் போனதுதான் இந்தியாவுக்கு எதிரான, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்து பெற்ற உதைகளின் முக்கிய அம்சமாகும். ஆகவே வரவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சில பழைய முகங்களைத் திருப்பி அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.