ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இரு முறை சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துடன் இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இது குறித்த ஒரு பார்வை...
இங்கிலாந்து: ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட படுதோல்வி மற்றும் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியான சறுக்கல்களுக்குப் பிறகு, இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடக்கூடும்.
அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆட்டத்தை வென்று தரும் பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு வலிமையான அணியாகக் திகழும் இங்கிலாந்து அணி 2010 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அப்போது 3-வது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கத்தில் களமிறங்குகிறது.
கடந்த ஆண்டு ஜாஸ் பட்லருக்குப் பதிலாக ஒருநாள் போட்டி மற்றும் டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் பொறுப்பேற்றார். அவர், ஐசிசி தொடரில் முதன்முறையாக கேப்டனாக செயல்பட உள்ளார். இங்கிலாந்தின் மிகவும் திறமையான அனைத்து வடிவ கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான 26 வயதான ஹாரி புரூக், சமீபகாலமாக தவறான காரணங்களுக்காகச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடருக்கு முன்பு, இங்கிலாந்து அணியின் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இரவு விடுதி காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, கடந்த மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கோரினார்.
இழந்த நற்பெயரை திரும்ப பெறும் வகையில் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாரி புரூக், மட்டை வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ஜாஸ் பட்லர், பில் சால்ட், பென்டக்கெட் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். நடுவரிசையில் டாம் பேன்டன், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அதிரடியாக விளையாடும் திறன்கொண்டவர்கள்.
பலவீனம் என்று பார்த்தால் பந்துவீச்சில் காயம் காரணமாக மார்க் வுட் இடம்பெறாததுதான். மேலும் ஜோப்ரா ஆர்ச்சர் தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனினும் ஜோஷ் டங்க் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். லூக் வுட், சேம் கரண், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் உறுதுணையாக செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த ஆதில் ரஷித் பலம் சேர்க்கக்கூடும்.
லியாம் டாவ்சன், வில் ஜேக்ஸ், ரேஹான் அகமது ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி வென்றிருந்தது. மேலும் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடர்களில் இங்கிலாந்து அணி ஒரே ஒரு தொடரை மட்டுமே இழந்துள்ளது.
இங்கிலாந்து அணி விவரம்: ஹாரி புரூக் (கேப்டன்), பென்டக்கெட், ஜாஸ் பட்லர், பில் சால்ட், டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், சாம் கரண், ஆதில் ரஷித், ரேஹான் அகமது, லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங்க், லூக் வுட்.
ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து அணி 7-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. இம்முறை வங்கதேச அணி கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அதேபோன்று இம்முறை அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
ரிச்சி பெரிங்டன்
ஸ்காட்லாந்தின் வெற்றி வாய்ப்புகள், முக்கிய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பொறுத்தே அமையும், அவர்களில் பிரண்டன் மெக்முல்லனும் ஒருவர். 26 வயதான அவர், சர்வதேச டி20-ல் 7 அரை சதங்கள் அடித்துள்ளார். அவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும்.
இதில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான தோல்வியின் போது அவர், அடித்த சிறப்பான 60 ரன்களும் அடங்கும். கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். சர்வதேச டி 20-ல் அவர், சதமும் விளாசி உள்ளார். 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சுழற்பந்து வீச்சாளரான மார்க் வாட் எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
அணி விவரம்: ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜைனுல்லா இஹ்சான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சஃப்யான் ஷெரீஃப், மார்க் வாட், பிராட்லி வீல்.
மேற்கு இந்தியத் தீவுகள்
மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த அணி ஒரு முறைகூட அரை இறுதியை எட்டவில்லை. 2024-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றிலேயே வெளியேறியது ஏமாற்றமளித்திருந்தாலும், டேரன் சமி பயிற்சியாளராக உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஷிம்ரன் ஹெட்மயர் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பி உள்ளார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர், சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ஷாய் ஹோப் சதம் விளாசியிருந்தார்.
டாப் ஆர்டரில் பிரண்டன் கிங்கும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். ரோவ்மேன் பவல், ஜான்சன் சார்லஸ் ஆகியோரும் மட்டையை சுழற்றக் கூடியவர்கள். சுழற்பந்து வீச்சில் அகீல் ஹொசைன் பலம் சேர்க்கக்கூடும். வேகப் பந்து வீச்சில் ஷமர் ஜோசப், ரோமாரியோ ஷெப்பர்டு, ஜேசன் ஹோல்டர் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.
ஷாய் ஹோப்
அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, குவென்டின் சாம்ப்சன், ஜெய்டன் சீல்ஸ், ரோமாரியோ ஷெப்பர்டு.
இத்தாலி
டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக களமிறங்குகிறது இத்தாலி அணி. இதன் மூலம் அந்த அணி ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 25-வது அணி என்ற பெருமையை பெற உள்ளது. இத்தாலி அணி 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய பிராந்திய இறுதிப் போட்டியில் 2-வது இடம் பிடித்திருந்தது.
இந்தத் தொடரில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இத்தாலி அணி டி 20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணியின் மிதவேகப்பந்து வீச்சாளரான ஹாரி மனென்டி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரது சிறப்பான செயல் திறனால் இத்தாலி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
கேப்டன் வெய்ன் மேட்சன், 42 வயதைக் கடந்தாலும், அவரது சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அந்த அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெய்ன் மேட்சன் 61 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்திருந்தார். முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல் ரண்டரான ஜெ.ஜெ.ஸ்மட்ஸ் அணியின் நடுவரிசையில் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். சுழற்பந்துவீச்சிலும் அவர் பலன் கொடுக்கக்கூடியவர்.
வெய்ன் மேட்சன்
அணி விவரம்: வெய்ன் மேட்சன் (கேப்டன்), மார்கஸ் காம்போபியானோ, ஜியான் பியோரோ மீடே, ஜைன் அலி, அலி ஹசன், கிரிஷன் ஜார்ஜ் கலுகமகே, ஹாரி மானென்டி, அந்தோனி மோஸ்கா, ஜஸ்டின் மோஸ்கா, சையத் நக்வி, பெஞ்சமின் மானென்டி, ஜஸ்பிரீத் சிங், ஜேஜே ஸ்மட்ஸ், கிராண்ட் ஸ்டூவர்ட், தாமஸ் டிராக்கா.
நேபாளம்
முன்னாள் ஆஸ்திரேலிய சர்வதேச வீரரான ஸ்டூவர்ட் லா, நேபாள அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். டி20 உலகக் கோப்பையில் விளையாட கிடைத்துள்ள வாய்ப்பை நேபாள அணி சிறந்த முறையில் பன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டக்கூடும்.
அந்த அணியின் பேட்ஸ்மேன்களான குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக் ஆகியோர் 2025-ம் ஆண்டில் முறையே 509 மற்றும் 394 ரன்கள் விளாசி அசத்தி உள்ளனர். இதில் குஷால் புர்டெல் டி 20 சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த 5 நேபாள வீரர்களில் ஒருவர் ஆவார், மேலும் 2024-ம்
ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். துணை கேப்டன் தீபேந்திர சிங்ஐரியும் சர்வதேச டி 20 போட்டியில் சதம் அடித்த வீரராக உள்ளார். சந்தீப் லாமிச்சான் கடந்த ஆண்டு 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அணி விவரம்: ரோஹித் பவுடல் (கேப்டன்), திபேந்திர சிங்ஐரி, சந்தீப் லமிச்சேன், குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், சுந்தீப் ஜோரா, ஆரிப் ஷேக், பசீர் அகமது, சோம்பால் கமி, கரண் கே.சி, நந்தன் யாதவ், குல்ஷன் ஜா, லலித் ராஜ்பன்ஷி, ஷேர் மல்லா, லோகேஷ் பாம்.