விளையாட்டு

இங்கிலாந்து அணியின் இதயத் துடிப்பு... யார் இந்த ஜூட் பெல்லிங்ஹாம்?

சு.சி.வீரகுந்தவை

கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது, இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு மெல்லக் கலைந்துகொண்டிருந்த தருணம். அந்த நேரத்தில், மைதானத்தின் நடுவில் இருந்து முன்னேறிய ஓர் இளம் வீரர் சில நொடிகளில் போட்டியின் போக்கையே மாற்றினார். இன்று உலகக் கால்பந்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருப்பவர் ஜூட் பெல்லிங்ஹாம்.

சில வீரர்கள் அணிக்காக விளையாடுவார்கள். சிலர் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருப்பார்கள். ஆனால், ஒரு நாடே நம்பும் வீரராக மாறுவது மிகவும் சிலருக்கே சாத்தியம். 2026 உலகக் கோப்பையில் அந்த இடத்தை ஜூட் பெல்லிங்ஹாம் நிரப்பியிருக்கிறார்.

23 வயதிலேயே உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தின் நம்பிக்கையைத் தோளில் சுமக்கும் வீரராக ஜூட் பெல்லிங்ஹாம் உருவெடுத்திருக்கிறார். ஒரு மிட்ஃபீல்டர் மட்டுமல்லாமல் போட்டியின் வேகத்தை மாற்றும் ஆற்றல், அழுத்தமான தருணங்களில் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல், அணியை வழிநடத்தும் தலைமைத்துவம் என நவீன கால்பந்தின் முழுமையான முகமாகவும் மாறியிருக்கிறார்.

பந்தை உதைக்க விரும்பாத சிறுவனின் பயணம்

2003-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி இங்கிலாந்தின் ஸ்டோர்பிரிட்ஜில் நான்-லீக் கால்பந்தில் 700-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்த புகழ்பெற்ற ஸ்ட்ரைக்கர் மார்க் பெல்லிங்ஹாம்கும், டெனிஸுக்கும் மகனாகப் பிறந்தார் ஜூட் விக்டர் வில்லியம் பெல்லிங்ஹாம்.

இவரது வாழ்க்கை, கால்பந்துடன் தொடங்கியதல்ல. சிறுவயதில் பர்மிங்காம் சிட்டி அகாடமிக்குச் சென்றபோது, மற்ற சிறுவர்களைப் போல பந்தை உதைக்காமல், மைதானத்தில் இருந்த புற்களைப் பிடுங்கிக்கொண்டிருப்பாராம். ஏழு வயது வரை கால்பந்தின் மீது பெரிதாக ஆர்வமே இல்லாத அந்தச் சிறுவனிடம், பயிற்சியாளர்கள் மட்டும் ஒரு வித்தியாசமான திறமையைக் கண்டறிந்தனர்.

அந்தத் திறமை வெறும் அகாடமியோடு நின்றுவிடவில்லை. 2020-ம் ஆண்டு, 17 வயதில் இங்கிலாந்து தேசிய அணிக்காக அறிமுகமான அவர், அந்நாட்டு வரலாற்றில் மிக இளம் வயதில் களமிறங்கிய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார். அப்போதே இங்கிலாந்து கால்பந்தின் எதிர்காலம் இவர்தான் என்ற எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கியது.

தந்தையின் ஆட்டத்தைப் பார்த்து வளர்ந்த ஜூட், மெதுவாக விளையாட்டை நேசிக்கத் தொடங்கினார். ஆனால், அவரது வெற்றிக்கான மிகப் பெரிய அடித்தளமாக இருந்தவர் அவரது தாய் டெனிஸ் தான். மகனின் கனவுக்காக தனது வேலை, வாழ்க்கை என அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி, டார்ட்மண்ட் முதல் மாட்ரிட் வரை அவருடன் பயணித்து ஒவ்வொரு நாளும் உறுதுணையாக நின்றிருக்கிறார். “என் வாழ்க்கையில் எந்த பயிற்சியாளரையும் விட என் அம்மாதான் முக்கியமானவர்” என்று ஜூட் பலமுறை நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

ஜூட்டின் இளைய சகோதரரான ஜோப் பெல்லிங்ஹாமும் தற்போது தொழில்முறை கால்பந்து வீரராக உருவெடுத்து வருகிறார். ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு திறமையான மிட்ஃபீல்டர்கள் உருவாகியிருப்பது இங்கிலாந்து கால்பந்தில் கவனிக்கத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பர்மிங்காமில் தொடங்கிய சாதனை…

2019-ம் ஆண்டு ஆகஸ்டில், 16 வயதில் பர்மிங்காம் சிட்டி முதல் அணிக்காக அறிமுகமான ஜூட், அந்தக் கிளப்பின் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அவர் அணிந்த 22-ம் எண் ஜெர்சி வெறும் எண்ணல்ல அது ஒரு தத்துவம். நீ நம்பர் 4 போல தடுக்கவும், நம்பர் 8 போல ஓடவும், நம்பர் 10 போல ஆட்டத்தை உருவாக்கவும் முடியும். மூன்றையும் சேர்த்தால்தான் 22 என்று அவரது அகாடமி பயிற்சியாளர்கள் கூறியதே அந்த எண்ணின் பின்னணியாக அமைந்தது. 2020-ல் போருசியா டார்ட்மண்டுக்கு அவர் மாறியபோது, வெறும் 44 போட்டிகளில் மட்டுமே விளையாடிய 17 வயது வீரருக்காக பர்மிங்காம் சிட்டி அந்த 22-ம் எண் ஜெர்சியை ஓய்வு பெறச் செய்தது. ஒரு இளம் வீரருக்குக் கிடைத்த மிக உயர்ந்த மரியாதைகளில் அதுவும் ஒன்றாக திகழ்ந்தது.

மாட்ரிட் நட்சத்திரம்

2020-ல் ஜெர்மனியின் போருசியா டார்ட்மண்ட் அணியில் இணைந்த ஜூட், வயதை மறக்க வைத்த ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 2022-ல் 19 வயதில் பூண்டஸ்லிகா வரலாற்றின் இளைய கேப்டனாக உருவெடுத்தார். 2022-23 சீசனில் டார்ட்மண்டை லீக் பட்டத்துக்கு மிக அருகில் கொண்டு சென்ற அவரது பங்களிப்புக்காக, பூண்டஸ்லிகா பிளேயர் ஆப் தி சீசன் (Bundesliga Player of the Season) விருதையும் வென்றார்.

அதே ஆண்டில் ஐரோப்பாவின் சிறந்த இளம் வீரருக்கான ‘கோல்டன் பாய்’ (Golden Boy) விருதையும், உலகின் சிறந்த இளம் கால்பந்து வீரருக்கான ‘கோபா டிராபி’ (Kopa Trophy) விருதையும் கைப்பற்றி, உலகக் கால்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை நிலைநிறுத்தினார்.

2023-ல் 103 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,129 கோடி) ஆரம்பத் தொகைக்கு ரியல் மாட்ரிட் அவரை ஒப்பந்தம் செய்தது. பலருக்கு அது ஒரு அழுத்தமான மாற்றமாகத் தோன்றியிருந்தாலும், ஜூட்டுக்கு அது தனது திறமையை உலகுக்கு நிரூபிக்கும் மேடையாக மாறியது. முதல் சீசனிலேயே லா லிகா, யுஇஎஃப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரு முக்கிய கோப்பைகளையும் வென்று, அனைத்துத் தொடர்களிலும் 23 கோல்கள் அடித்தார்.

அந்த அறிமுக சீசனிலேயே சாண்டியாகோ பெர்னபேயுவின் புதிய ஹீரோவாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார். அதோடு லா லிகா பிளேயர் ஆப் தி சீசன் (La Liga Player of the Season) மற்றும் லாரியஸ் உலகளாவிய சிறந்த சாதனைத் தொடக்க வீரர் விருது (Laureus World Breakthrough of the Year) உள்ளிட்ட விருதுகளையும் கைப்பற்றினார். 2025-26 சீசனிலும் ரியல் மாட்ரிட் அணிக்காக 39 போட்டிகளில் 8 கோல்கள், 5 அசிஸ்ட்களைப் பதிவு செய்து தனது தாக்கத்தைத் தொடர்ந்து நிரூபித்தார்.

இங்கிலாந்தின் இதயத் துடிப்பு

2022 உலகக் கோப்பை, யூரோ 2024 ஆகிய தொடர்களில் இங்கிலாந்தின் முக்கிய வீரராக விளையாடிய ஜூட், தற்போது மூன்றாவது பெரிய சர்வதேச தொடரிலும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

2026 ஃபிபா உலகக் கோப்பைத் தொடரில் ஜூட் பெல்லிங்ஹாம் தனது வாழ்க்கையின் சிறந்த கால்பந்து திறனை வெளிப்படுத்தி வருகிறார். ஆறு போட்டிகளில் ஆறு கோல்கள், ஒரு அசிஸ்ட், நான்கு ‘ஆட்டநாயகன்’ விருதுகள் என இங்கிலாந்தின் வெற்றிப் பயணத்தில் மையக் கதாபாத்திரமாக மாறியுள்ளார். இங்கிலாந்தின் முக்கியமான ஒவ்வொரு நாக்-அவுட் போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அவர், அணியின் மிக நம்பகமான வீரராக உருவெடுத்துள்ளார்.

காலிறுதியில் நார்வே அணிக்கு எதிராக இங்கிலாந்து பின்தங்கியிருந்தபோது, முதல் பாதி கூடுதல் நேரத்தில் சமநிலை கோலை அடித்தார். பின்னர் கூடுதல் நேரத்தின் 93-வது நிமிடத்தில் வெற்றிக் கோலைப் பதிவு செய்து, 2-1 என்ற கணக்கில் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த ஆட்டத்தில் 111 நிமிடங்கள் முழுவதும் ஓய்வின்றி விளையாடிய அவர் மீண்டும் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

நார்வேக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, பயிற்சியாளர் தாமஸ் டுசெல் “ஜூட் உலகத் தரம் வாய்ந்த வீரர்” என்று புகழ்ந்தார். அதே நேரத்தில், இங்கிலாந்தின் ஆட்டம் அதிர்ஷ்டத்தை அதிகம் சார்ந்திருந்ததாக வெளிப்படையாக விமர்சித்தார். அந்த விமர்சனத்துக்கு பதிலளித்த ஜூட், இப்படிப்பட்ட போட்டிகளில் இருக்கும் அழுத்தத்தை வெளியிலிருந்து முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. முக்கியமானது வெற்றிதான் என்று அமைதியாகக் கூறினார்.

அதே போட்டியில் மஞ்சள் அட்டை வாங்காமல் இருந்தது குறித்துப் பேசிய ஜூட், வாரம் முழுவதும் என் அம்மா என் கோபத்தையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்தச் சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த சொற்கள் தான் இன்று என்னைக் காப்பாற்றியது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஒரு காலத்தில் மைதானத்தில் புற்களைப் பிடுங்கிக்கொண்டிருந்த சிறுவன், இன்று உலகக் கோப்பையின் போக்கையே மாற்றும் வீரராக வளர்ந்திருக்கிறார். அது வெறும் திறமையின் வெற்றி மட்டுல்ல குடும்பத்தின் தியாகம், ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை சேர்ந்து எழுதிய வாழ்க்கைப் பயணம். அதனால்தான் ஜூட் பெல்லிங்ஹாம் இன்று ஒரு உலகத் தரம் வாய்ந்த கால்பந்து வீரராக மட்டுமல்ல; வரவிருக்கும் ஒரு தசாப்தம் உலகக் கால்பந்தின் மையத்தில் ஒலிக்கப்போகும் பெயராகவும், ஒரு தலைமுறையின் நம்பிக்கையாகவும் திகழ்கிறார்.

SCROLL FOR NEXT