ஆஷஸ் கோப்பை உடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியின் கேப்டன்கள்.

 
விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் வாகை சூடுமா இங்கிலாந்து கிரிக்கெட் அணி? - ஆஷஸ் தொடர் ப்ரீவியூ

வேட்டையன்

பெர்த்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நவீன காலத்துக்கு ஏற்ப கிரிக்கெட் விளையாட்டு பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. தி ஹண்ட்ரட், டி20 கிரிக்கெட் என உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கிரிக்கெட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டை அப்படியே உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையில் ஐசிசி உட்பட உலக நாடுகளின் கிரிக்கெட் நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் என்றாலே ஆட்டக்களம் அனல் பறக்கும். இந்த முறை ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. நவ.21-ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது.

கடந்த 2010-11ல் ஆஸ்திரலேயாவில் ஆஷஸ் தொடர் நடைபெற்றது. அதில் 3-1 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றது. அதன் பின்னர் 2013-14, 2017-18, 2021-22 என மூன்று முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடியது இங்கிலாந்து அணி. அதில் ஒரு போட்டியில் கூட இங்கிலாந்து அணி வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் 2017-18 முதல் 4 முறை நடந்த ஆஷஸ் தொடரில் வெற்றிக்கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில்தான் 2025-26 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து அணி தொடங்குகிறது. இந்த முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி துடிப்பான இளம் வீரர்களை அணியில் அதிகம் கொண்டுள்ளது. அதிரடி ஆட்ட பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணி அணுகி வருகிறது. மறுபக்கம் அனுபவ வீரர்கள் அதிகம் நிறைந்த அணியாக ஆஸ்திரேலியா விளங்குகிறது. இதனால் இந்த தொடரில் ரன்கள், விக்கெட்டுகளோடு வீரர்களிடையே வார்த்தை மோதல்களும் களத்தில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து அணி விவரம்: பென் டக்கெட், ஸாக் க்ராலி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தல், மேத்யூ போட்ஸ், டங், வில் ஜேக்ஸ்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஸ்டார்க், நேதன் லயன், டக்கெட், ஸ்காட் போலண்ட், வெப்ஸ்டர், இங்க்லிஸ், மைக்கேல் நெசர்.

SCROLL FOR NEXT