மைக்கேல் வான்
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி சந்தித்த மோசமான தோல்விக்குப் பிறகு, அந்த அணியில் பல மாற்றங்கள் தேவை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் அவற்றில் முதன்மையானது அணியின் கலாச்சாரம் (culture) தான் என அவர் தெரிவித்துள்ளார்.
அணி மீதான கட்டுப்பாடுகளும் வீரர்களின் சுயக்கட்டுப்பாடும் மிகவும் தளர்வாகவும் கட்டுப்பாடற்றதாகவும் உள்ளன, குறிப்பாக அணியின் குடிபோதைக் கலாச்சாரத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்கிறார் மைக்கேல் வான்.
இங்கிலாந்து டி20 கேப்டனாக அறிவிக்கப்படும் முன்பு இங்கிலாந்தின் டெஸ்ட் வைஸ் கேப்டன் ஹாரி புரூக் நியூஸிலாந்தில் ஒரு மதுபான விடுதிக்கு செம குடிபோதையில் சென்றுள்ளார், ஏற்கெனவே அவர் நிற்க முடியாத அளவுக்குக் குடித்திருந்ததால் ‘பவுன்சர்’ அவரை உள்ளே விட மறுக்க அங்கு கைகலப்பில் ஈடுபட்டார், இது தெரியவந்தவுடன் மன்னிப்புக் கோரினார்.
4-1 என்று உதை வாங்கிய சமீபத்திய ஆஷஸ் தொடரின் போது பகலிரவு பயிற்சி ஆட்டத்தைத் துறந்து நூசா கடற்கரையில் மதுபோதை விருந்தில் களியாட்டம் போட்டனர். இதனையடுத்து பிரிஸ்பனிலும் தோல்வி, அடுத்து அடிலெய்டிலும் தோற்று ஆஷஸ் தொடரை 11 நாட்களில் இழந்தனர் இங்கிலாந்து. இது கடும் சர்ச்சைகளை அங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் மைக்கேல் வான் ‘தி டெலிகிராப்’ ஊடகத்தில் எழுதிய பத்தியில் இங்கிலாந்தின் குடி கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“நீங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய அனைத்திலும் முழு கவனம் இருக்க வேண்டும், இந்த தொடருக்கு முன்பே பலர் இங்கிலாந்தின் தயாரிப்பு முறை இங்கு வேலை செய்யாது என பலரும் எச்சரித்தனர்.
அவசரமான பயிற்சி போட்டிகள், பிடிவாதமான அணுகுமுறை ஆகியவை தொடக்கத்திலிருந்தே குறையாக இருந்தன. இந்த தொடரில் சில தருணங்களில் இங்கிலாந்து போட்டியை தங்கள் பக்கம் திருப்பும் வாய்ப்புகள் இருந்தாலும், முக்கியமான நேரங்களில் தேவையான ஒழுக்கமும் மன உறுதியும் அவர்களிடம் இல்லை. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் அவை இருந்தன. காரணம், நல்ல கிரிக்கெட் அணிகள் ஒழுக்கம், தொடர்ச்சியான நடத்தை மற்றும் சிறந்த தயாரிப்பு ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்படுகின்றன. இங்கிலாந்து அணி அதில் தோல்வியடைந்துள்ளது.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இங்கிலாந்து எதையும் வெல்லவில்லை என்பதே கசப்பான உண்மை. ஒரு விளையாட்டு அணியாக, ரசிகர்களை ஏமாற்ற முடியாது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளிடம் இங்கிலாந்தில் 2-2 என்று தொடர்களைச் சமன் செய்தும் இரு அணிகளிடம் அவர்கள் மண்ணில் 4- 1என்று உதை வாங்கியதையும் ரசிகர்கள் கசப்புடன் பார்த்துள்ளனர். இப்போது மாற்றம் அவசியம் என்பதை உணர வேண்டிய நேரம் இது – அந்த மாற்றம் அணியின் கலாச்சாரத்திலிருந்தே தொடங்க வேண்டும்.” என்று அந்தப் பத்தியில் அவர் எழுதியுள்ளார்.