இங்கிலாந்து வீரர்கள் அகமது, ரஷீத்

 
விளையாட்டு

விசாவுக்காக காத்திருக்கும் இங்கிலாந்து வீரர்கள் ரஷீத், அகமது - டி20 உலகக் கோப்பை

வேட்டையன்

லண்டன்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர்களான அடில் ரஷீத் மற்றும் ரிஹான் அகமது ஆகியோருக்கு இன்னும் இந்தியா வருவதற்கான விசா கிடைக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த செய்தியை இங்கிலாந்தின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இலங்கை உடன் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்கிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ‘குரூப் - சி’-யில் உள்ளது. இந்த பிரிவில் வங்கதேசம், இத்தாலி, நேபாளம் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் சுற்றில் இந்த அணிகளுடன் இங்கிலாந்து விளையாடுகிறது. பிப்ரவரி 8-ம் தேதி அன்று நேபாளத்துடன் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. அந்த போட்டிதான் இந்த தொடரில் இங்கிலாந்து அணி விளையாடும் முதல் போட்டி.

சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத் மற்றும் அகமது என இருவரும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது விசா விண்ணப்பத்தை இந்திய தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும் அதற்கான அனுமதி அளிப்பதற்கான நடைமுறையில் தாமதம் இருப்பதாக தகவல். இது தொடர்பாக பிரிட்டிஷ் அரசின் உதவியையும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் தொடரில் ரஷீத் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரில் அகமது விளையாடுகிறார். அவர்களுக்கு விசா கிடைத்ததும் இங்கிலாந்து அணியுடன் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராக உதவும். இவர்கள் இருவரையும் தவிர்த்து லியாம் டாசன் மட்டுமே இங்கிலாந்து அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். வில் ஜேக்ஸ் மற்றும் ஜேக்கப் பெத்தல் ஆகியோரும் சுழற்பந்து வீசும் பவுலிங் ஆப்ஷன்களாக அணியில் உள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்தியா மற்றும் இலங்கை ஆடுகளத்தில் ரஷீத்தின் அனுபவம் இங்கிலாந்துக்கு பெரிதும் கைகொடுக்கும்.

பிப்ரவரி 14-ம் தேதி அன்று வங்கதேச அணியுடன் கொல்கத்தாவில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இருப்பினும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதும் சந்தேகமாக உள்ளது. ஏனெனில், வங்​கதேசத்​தில் நடை​பெற்ற இந்​துக்​கள் மீதான தாக்​குதல் சம்​பவம் கிரிக்​கெட்​டிலும் எதிரொலித்து வரு​கிறது. தாக்குதல் சம்​பவத்​தால் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணி​யில் இடம்​பெற்​ற வங்​கதேச வீரர் முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை பிசிசிஐ உத்​தர​வின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தங்களுக்கான போட்டிகளை இந்தியாவுக்கு வெளியில் நடத்த வேண்டும் என ஐசிசி வசம் வங்கதேச கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT