இங்கிலாந்து தன் உலகக் கோப்பை 2026-க்கான இறுதி தயாரிப்பு பயிற்சி ஆட்டத்தை 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது. தங்களது 2-வது உலகக் கோப்பை வெற்றிக்காக கடுமையாக இந்த உலகக் கோப்பையில் ஆட முயற்சி செய்து வரும் இங்கிலாந்துக்கு இந்த வெற்றி ஓர் உற்சாகத் தூண்டலாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் டெக்லான் ரைஸ் 9-வது நிமிடத்திலும், ஆண்டனி கார்டன் பெனால்டி மூலம் 68-வது நிமிடத்திலும், ஆலி வாட்கின்ஸ் 87-வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் சிரமமான வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்திற்கு முன்பான இந்தப் போட்டியில் மிகவும் ஆதிக்கம் செலுத்தியது.
மழை நீரால் நிரம்பியிருந்த மைதானம் சிறப்பான வடிகால் வசதியால் விரைவாக விளையாடத் தகுந்த நிலைக்கு மாற்றப்பட்ட நிலையில், போட்டி தொடங்கிய ஒன்பதாவது நிமிடத்திலேயே ஆண்டனி கார்டனின் சிறப்பான பாஸை பயன்படுத்தி டெக்லான் ரைஸ் கோல் அடித்து இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
அதன்பின் இங்கிலாந்து தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹாரி கேனின் அற்புதமான ஹெட் கிக் ஒன்றை கோஸ்டாரிகா கோல் கீப்பர் செக்வெய்ரா அற்புதமாகத் தடுத்தார். நோனி மதுவேக்கேவின் முயற்சிகளும் கோலாக மாறவில்லை. விரைவு ஃப்ரீ கிக்கில் ஹாரி கேன் அடித்த கோல் விதிமுறை மீறலால் நிராகரிக்கப்பட்டது.
முதல் பாதி முழுவதும் கோஸ்டாரிகா பெரிதாக தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றாலும், உடல் மோதல்கள் காரணமாக ஆட்டம் சில நேரங்களில் பரபரப்பாக மாறியது. முதல் பாதி முடிவில் கார்டனுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பும் வீடியோ ஆய்வுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது.
இரண்டாம் பாதியிலும் இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்ந்தது. 63-வது நிமிடத்தில் புகாயோ சகா, எபெரெச்சி எஸே உள்ளிட்ட ஆறு மாற்று வீரர்களை இங்கிலாந்து பயிற்சியாளர் டுச்சல் களமிறக்கினார்.
களமிறங்கிய சிறிது நேரத்திலேயே எஸே உருவாக்கிய அழுத்தத்தின் விளைவாக இங்கிலாந்துக்கு பெனால்டி கிடைத்தது. ஜூட் பெல்லிங்காமின் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட அந்த வாய்ப்பை ஆண்டனி கார்டன் வெற்றிகரமாக கோலாக்கி அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
அதன்பின் மாற்று வீரர்கள் ஆட்டத்தின் வேகத்தை மேலும் அதிகரித்தனர். மோர்கன் ரோஜர்ஸ் கோல் அடிக்கும் வாய்ப்பை நெருங்கினார்; மார்கஸ் ராஷ்போர்ட் தொடர்ந்து கோஸ்டாரிகா பாதுகாப்பை சிரமப்படுத்தினார்.
போட்டி முடிவிற்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது, ரோஜர்ஸின் ஷாட்டை கோல்கீப்பர் தடுத்தபின் திரும்பிய பந்தை ஒல்லி வாட்கின்ஸ் தலையால் கோலாக்கி இங்கிலாந்தின் வெற்றியை 3-0 என உறுதிப்படுத்தினார்.