ட்ராவிஸ் ஹெட்
ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் பெர்த்தில் இரண்டே நாளில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க ட்ராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுக்க மார்னஸ் லபுஷேன் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுக்க 28.2 ஓவர்களில் 205/2 என்று ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா அணி
இன்று காலை 123/9 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா கொஞ்ச நேரம் இங்கிலாந்தை வெறுப்பேற்றி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த அதிவேகப் பிட்சில் 40 ரன்கள் முன்னிலை 100 ரன்கள் முன்னிலைக்குச் சமம். ஆனால் என்ன நடந்தது? இங்கிலாந்து 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவில் சில நல்ல பந்து வீச்சு மற்றபடி பொறுப்பற்ற பேட்டிங்கினால் 34.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மிட்செல் ஸ்டார்க் அற்புதத்திலும் அற்புதம். மீண்டும் 3 விக்கெடுட்களைக் கைப்பற்றி இந்த டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும் பிரெண்டன் டக்கெட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து பவுலிங்கை ‘கல்லி’ கிரிக்கெட் போல் நார் நாராகக் கிழித்த ட்ராவிஸ் ஹெட்! 69 பந்துகளில் சதம்!
205 ரன்கள் வெற்றி இலக்குடன் எங்கே கவாஜாவையும் வெதரால்டையும் இறக்குவார்கள் என்று பார்த்தால், ட்ராவிஸ் ஹெட், வெதரால்டுடன் இறங்க ஆட்டம் களை கட்டியது. மணிக்கு 150 கிமீ வீசும் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட், 140-145 வீசும் அட்கின்சன், கார்ஸ், இதோடு பென் ஸ்டோக்ஸ் என்று அபாரமான பந்து வீச்சில் பவுன்ஸ் பிட்சில் 205 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா கஷ்டப்படப் போகிறது என்று பார்த்தால் ட்ராவிஸ் ஹெட் அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தி, பிரில்லியண்டான சிலபல ஷாட்களை துரித கதியில் ஆடத்தொடங்கினார்.
ஆர்ச்சரும் அட்கின்சனும் தான் தொடங்கினர் முதல் 4 ஓவர்களில் 7 ரன்கள்தான் வந்தது. 5வது ஓவரை வீசிய ஆர்ச்சரை வெதரால்டு அற்புதமான ஒரு பவுண்டரியும் ஒரு மூன்றையும் எடுக்க அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தது. 8வது ஓவரில் கார்ஸ் பந்தை தேர்ட்மேன் மேல் தூக்கிவிட்டு அப்பர் கட்டில் ஹெட் சிக்ஸ் அடித்தார். அதிலிருந்து உரியடி உத்சவம் ஆரம்பமானது. 8வது ஓவரில் 11 ரன்கள் வர ஸ்கோர் 39/0 என்று இருந்தது. பிறகு உட் ஓவரில் 8 ரன்கள்.
மீண்டும் கார்ஸ் வர டிராவிஸ் ஹெட் மீண்டும் அப்பர் கட்டில் சிக்சருக்குப் பறக்க விட்டார். அடுத்த உட் ஓவரில் உட் வீசிய அதிவேகப் பந்திற்கு ஆப் சைடில் நகர்ந்து கொண்டு ஃபைன் லெக்கில் ஒரு சூரியகுமார் சிக்ஸ் விளாசியதோடு அடுத்த பந்துதான் நம்ப முடியாத ஒரு ஷாட்டை ஆடினார். பந்தை உள்ளே வாங்கி கட் அடித்தார் 4 ரன்கள். மீண்டும் கார்ஸ் வர வெதரால்ட் ஒரு பவுண்டரி விளாசினார். ஆனால் அதே கார்ஸ் ஓவரில் வெதரால்ட் 23 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஸ்கோர் 75 என்று ஆஸ்திரேலியா பக்கம் இருந்தது. லபுஷேன் இறங்க டிராவிஸ் ஹெட் 35 பந்துகளில் அரைசதம் கண்டார்.
அதன் பிறகும் எங்கு போட்டாலும் அடி, ஒதுங்கி ஒதுங்கி போட்டு சாத்தி எடுத்தார் ஹெட், அவருடன் லபுஷேனும் ஒதுங்கி ஒதுங்கி அடிக்க ஆரம்பித்தார். இங்கிலாந்தின் உலகப்புகழ்பெற்ற ஐவர் கூட்டணிப் பந்து வீச்சு கிழி கிழி என்று கிழித்து எடுக்கப்பட்டது.
ட்ரிங்க்ஸ் முடிந்து பென் ஸ்டோக்ஸ் வீச வந்தார் அவரை 4 பவுண்டரிகளை விளாசினார் ஹெட். ஆர்ச்சரை ஹெட் அடித்த இன்னொரு ஷாட் அராஜகத்தின் உச்சம் என்றுதான் கூற வேண்டும். ஷார்ட் பிட்ச் எகிறு பந்து ஒதுங்கிக் கொண்ட ஹெட் நேராக சைட் ஸ்க்ரீனுக்குப் பக்கத்தில் ஒரு டென்னிஸ் அறை அறைந்தார் பந்து சிக்ஸ். நம்ப முடியாத ஒரு ஷாட். பிறகு 69 பந்துகளில் சதம் கண்டார். கில்கிறிஸ்ட் இங்கிலாந்துக்கு எதிராக 57 பந்துகளில் சதத்திற்குப் பிறகு மாடர்ன் கிரிக்கெட்டில் ஹெட் அதிவேக ஆஸ்திரேலிய டெஸ்ட் சதத்தை எடுத்தார். மறுமுனையில் லபுஷேன் தன் பங்குக்கு இங்கிலாந்து பவுலிங்கை இழிவு படுத்திக் கொண்டிருந்தார்.
ஹெட் கடைசியில் கார்ஸை மீண்டும் 2பவுண்டரிகள் விளாசினார். 83 பந்துகளில் 123 ரன்கள் எடுத்த போது டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆல் டைம் கிரேட் டெஸ்ட் சதம் ஆகும் இது. பிறகு ஜோ ரூட் ஓவரில் லபுஷேன் சிக்ஸ் அடித்து அரைசதம் காண, கேப்டன் ஸ்மித் பவுண்டரியுடன் வெற்றி ரன்களை எடுத்தார். 10 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் பொறுப்பற்ற முறையில் ஆடியதால் தோல்வி!
2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி பொறுப்பற்ற முறையில் ஆடியது. குறிப்பாக ஆலி போப், ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகிய மூவரும் ஆடிய ஸ்ட்ரோக் மிக மிக மோசமானது. கால்களை நகர்த்தாமல் கவர் ட்ரைவ்வை நின்ற இடத்திலிருந்தே ஆடிய அராஜகமான ஆட்டம் இங்கிலாந்துக்கு எதிராகவே போய் முடிந்தது.
பாஸ்பால் ஆடுகிறோம் என்று கடைசியில் ஆஸ்திரேலியாவின் பாஸ்பாலில் சிக்கி 205 ரன்களை 28 ஓவர்களில் தோற்று அவமானப்பட்டுள்ளனர். பாஸ்பாலுக்கே பாஸ்பால் பாடம் எடுத்தார் ட்ராவிஸ் ஹெட்.