விளையாட்டு

T20 WC 2026: பாக். அணிக்கு எதிராக ஆதிக்கத்தை தொடருமா இந்திய அணி?

வேட்டையன்

கொழும்பு: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (பிப்.15) விளையாட உள்ளன. இந்த தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

இந்த ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2009 முதல் இதுவரை 51 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 28 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

          

இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 215. இங்கு எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ரன்கள் 80. இந்த மைதானத்தில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா 24 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். தற்போது இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவனில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வாஷிங்டன் சுந்தரா அல்லது குல்தீப் யாதாவா என உள்ளதாக தகவல். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் 5 ஆட்டங்களில் வாஷி விளையாடி உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆதிக்கத்தை தொடருமா இந்திய அணி? - டி20 உலகக் கோப்பையில் 2007, 2012, 2014, 2016, 2021, 2022, 2024 பதிப்பில் விளையாடி உள்ளது. இதில் 2007-ல் மட்டும் இரண்டு முறை இந்தியா விளையாடி இருந்தது. மொத்தம் 8 ஆட்டங்களில் 6 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021-ல் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2007-ல் லீக் ஆட்டம் சமனில் முடிந்தது. அதில் பவுல்ட்-அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இதே தொடரின் இறுதிப் போட்டியில் 5 ரன்களில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் 16 முறை நேருக்கு நேர் விளையாடி உள்ளன. அதில் 13 முறை இந்தியா வென்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மூன்று ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. அந்த மூன்றிலும் இந்தியா வென்றது. இந்த தொடரை டி20 பார்மெட்டில் நடைபெற்றது.

SCROLL FOR NEXT