விளையாட்டு

ஆஸி. ஓபனில் 11-வது முறையாக இறுதிக்கு முன்னேறி ஜோகோவிச் சாதனை!

வேட்டையன்

சிட்னி: நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச். இது ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அவர் விளையாடும் 11-வது இறுதிப் போட்டியாக அமைந்துள்ளது.

த்ரில்லான அரையிறுதி ஆட்டத்தில் 3-6, 6-4, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் உலக டென்னிஸ் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள இத்தாலியின் ஜன்னிக் சின்னரை செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் வீழ்த்தினார். இதன் மூலம் தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் அல்கராஸ் உடன் ஜோகோவிச் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விளையாட உள்ளார்.

          

“இந்த ஆட்டம் குறித்து பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது அதியற்புதமான ஒன்று. தொடர்ந்து உயர்மட்ட அளவில் விளையாடி வருகிறார். சுமார் 4 மணி நேர இந்த ஆட்டம் நீடித்தது. கடந்த 2012 இறுதிப் போட்டியில் நடால் உடன் 6 மணி நேரம் விளையாடிய அனுபவத்தை என்னால் நினைவுகூர முடிகிறது.

சின்னர் உடன் விளையாடி வெல்ல அதிகளவில் ஆட்டத்தரம் வேண்டும். அதுதான் வெற்றிக்கும் வித்திடும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை வாழ்த்துகிறேன். இரவு வரை காத்திருந்து இந்த ஆட்டத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு நன்றி. சின்னர், அல்கராஸை வீழ்த்துவது கடினம். ஆனால், அது முடியாத காரியம் அல்ல.

பட்டம் வெல்ல உலகத்தின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் உடன் விளையாட வேண்டி உள்ளது. அவருக்கு எதிராக சிற்ப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். இது எனது விருப்பம். வெற்றியாளரை கடவுள் தீர்மானிக்கட்டும்” என வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் தெரிவித்தார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்வெரேவை வீழ்த்தி இளம் வீரரான அல்கராஸ் இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

SCROLL FOR NEXT