மும்பை: வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி முன்வரிசையில் களமிறங்குவது சிறப்பாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் டிவில்லியர்ஸ் கூறியதாவது: வரும் 28-ம் தேதி தொடங்கும் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான முறையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக தோனி விளையாடி வருகிறார். அந்த அணி 5 முறை கோப்பையை வென்றதற்கு தோனியின் பங்களிப்பு அதிகமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் களமிறங்கி பினி ஷருக்கான பணியைச் செய்து வருகிறார். அவர் அப்படி செய்யக் கூடாது. அவர் முன்வரிசையில் வந்து விளையாடுவது அணிக்கு நல்லது. நான்கு, ஐந்து அல்லது ஆறாவது இடங்களில் இறங்கி விளையாடலாம். எப்போதும் முன்வரிசையில் அவர் இறங்கி விளையாட வேண்டும் என்று நான் கூறவில்லை.
பேட்டிங் வரிசையில் முன்னதாக இறங்கும்போது அது தாக்கத்தை ஏற்படுத்தும். தோனி கேப்டனாக இல்லாததால் 7 அல்லது 8-வது இடத்தில் இறங்கி விளையாடுகிறார். இந்த வரிசையில் விளையாடும்போது அவருக்கு போதுமான பங்கு இல்லாமல் போய்விடுகிறது என்று நான் நினைக்கிறேன். அவரது பேட்டிங் எவ்வளவு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.
44 வயதிலும் தோனியின் பங்கு அணிக்கு கூடுதல் வலுவைப் பெற்றுத் தருகிறது. எனவே, அவர் முன்வரிசையில் களமிறங்கி விளையாடவேண்டும். மேலும், சிஎஸ்கே அணியில் தற்போது சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். இந்த சீசனில் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. பொறுப்பை ஏற்க மிகச் சரியான வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார்.
அணிக்கு சஞ்சு சாம்சனை அழைத்து வந்த பெருமை தோனியையே சாரும். சரியான நபருக்காக அவர் (தோனி) காத்திருக்கிறார். அழுத்தங்கள் இருக்கும் போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனக்கான பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப விளையாட வேண்டும். அப்போதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் போட்டிகளை அவரால் எளிதாக கையாள முடியும். அதற்கான சந்தர்ப்பத்தை சஞ்சு சாம்சனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நான் கோருகிறேன். இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
ஜெர்ஸி எண் மாறுகிறதா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரருமான எம்.எஸ்.தோனியின் ஜெர்ஸி எண் மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, இந்திய அணிக்காக விளையாடியபோது 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்திருந்தார். சிஎஸ்கே-வுக்காக விளையாடும்போது 7-ம் எண் ஜெர்ஸியை அவர் அணிந்துவந்தார்.
இந்நிலையில், தான் இனிமேல் நம்பர் 7 ஜெர்ஸியை பயன்படுத்தபோவதில்லை என்றும், நம்பர் 8-க்கு மாறப் போவதாகவும் தோனியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவில், “சில எண்கள் உங்களுடன் நீடித்து இருக்கும், அப்படியான எண்களில் ஒன்றுதான் 7. ஆனால் இன்று.. 8-ம் எண்ணுக்கு மாறுகிறேன். இதற்கான காரணத்தை விரைவில் நீங்கள் அறிவீர்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் நம்பர் 7-லிருந்து 8-க்கு மாற்றப்பட்ட ஜெர்ஸியின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.