ஜார்கண்ட் அணி மற்றும் எம்.எஸ்.தோனி
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற சாம்பியன் ஜார்கண்ட் அணியின் எழுச்சியின் பின்னணியில் தல தோனியின் பங்களிப்பு அபரிமிதமானது என்று ஜார்கண்ட் கிரிக்கெட் நிர்வாகிகள் விதந்தோதியுள்ளனர்.
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றதற்காக ஜார்கண்ட் வீரர்களுக்கு ரூ.2 கோடி அறிவித்த வாரியம் இப்போது விஜய் ஹஜாரே 50 ஓவர் கிரிக்கெட் தொடரையும் வென்றால் ரூ.5 கோடி என்று அறிவித்துள்ளது. இது புதிய உத்வேகத்தை இஷான் கிஷன் அண்ட் கோவிற்கு அளித்துள்ளது. ஆனால் விஷயம் இதுவல்ல, தோனி ஜார்கண்ட் கிரிக்கெட் விவகாரத்தில் எவ்வளவு ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்துள்ளார் என்பதுதான் இதில் நமக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் அணியின் பயமற்ற அணுகுமுறையும் தோல்விபயத்தைப் போக்கி கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆடியதிலும் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பு அங்கு விதந்தோதப்பட்டு வருகிறது.
முதலில் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் தோனியின் ஆலோசனைப்படி சில முக்கிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜார்கண்ட் அணிக்காக நீண்ட காலம் ஆடிய ஷாபாஸ் நதீம், சவுரவ் திவாரி ஆகியோர் செயலர் மற்றும் இணைச் செயலராக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தோனியிடம் ஆலோசனை பெற்றனர். தோனி, அப்போது வெளியிலிருந்து பயிற்சியாளரைக் கொண்டு வருவதை விட ஜார்கண்ட் கிரிக்கெட்டை நன்கு அறிந்த உள்ளூர் பயிற்சியாளரை நியமியுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதன் படிதான் ஜார்கண்ட் கிரிக்கெட்டின் பலதரப்பட்ட வயதுடைய வீரர்களுடன் பயிற்சி மட்டத்தில் நன்கு இணைந்திருந்த ரத்தன் குமார் தலைமைப் பயிற்சியாளராகவும் சன்னி குப்தா பவுலிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
செயலர் ஷாபாஸ் நதீம், தோனியின் பங்களிப்பு பற்றி கூறுகையில், “இந்த சீசன் துவங்குவதற்கு முன்பாக பயிற்சியாளர், நிர்வாகிகள் நியமனம் முதல் அனைத்திலும் தோனியிடம் அறிவுரையைப் பெற்றோம். தோனிக்கு ஜார்கண்ட் அணி மீது ஒரு தனித்துவமான கவனம் உண்டு. ஜார்கண்ட் அணி நன்றாக ஆட வேண்டும் என்று விரும்புபவர். பெரிய வீரர் தோனி, அவர் இந்த அணியின் மீது காட்டும் கவனம் உண்மையில் பெருமையளிக்கிறது.
இன்னொன்றையும் சொல்கிறேன், ஒவ்வொரு ஆட்டத்தையும் நெருக்கமாக கூர்ந்து அவதானித்தார் தோனி. மொத்தமாக சையத் முஷ்டாக் அலி தொடரையே தோனி கவனமேற்கொண்டார். வீரர்களின் அனைத்து பலம் மற்றும் பலவீனங்களை குறித்துக் கொண்டார். அதை எங்களிடம் விவாதித்தார். ஜார்கண்ட் அணியின் ஒவ்வொரு வீரரின் புள்ளி விவரங்களையும் எண்களையும் அவர் கையில் வைத்திருக்கிறார். ஜார்கண்ட் கிரிக்கெட் வளர்ச்சியில் தோனி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ” என்றார்.
ஜார்கண்ட் அணியின் துரித எழுச்சியின் பின்னணியில் தோனியின் பங்களிப்பு அவர்களுக்கே மிகுந்த ஆச்சரியம். ஏனெனில், இவ்வளவு விரைவு கதியில் அணி ஒரு சாம்பியனாக உருவெடுத்துள்ளது. வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது முதற்கொண்டு தோனியின் ஆலோசனையைப் பின்பற்றி நடந்து சாம்பியனாகியுள்ளது ஜார்கண்ட். ஹாட்ஸ் ஆஃப் டு தோனி.
பிசிசிஐ-யும் ஏதாவது ஒரு விதத்தில் தோனியை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மட்டத்திற்குள் கொண்டு வர முடிந்தால் உண்மையில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம்.