சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்
கொழும்பு: இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் சதம் அடித்து அசத்தினார்.
கொழும்பு நகரில் உள்ள நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை பிரதமர் லெவன் அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிந்து ரசந்தா 71, நிஷந்தா பெர்னாண்டோ 66, சோனல் தினுஷா 52 ரன்கள் சேர்த்தனர்.
கேஷரா நுவந்தா 9, திலும் சுதீரா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் இலங்கை பிரதமர் லெவன் அணி மேற்கொண்டு பேட்டிங்கை தொடராமல் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எதும் எடுக்காத நிலையில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் கேப்டன் கே.எல்.ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
95 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை கேஷரா நுவந்தா பிரித்தார். கே.எல்.ராகுல் 67 பந்துகளில், ஒரு சிக்ஸ, 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் கேஷரா நுவந்தா பந்தில் போல்டானார். இதன் பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா சீராக ரன்கள் சேர்த்தார். நேர்த்தியாக செயல்பட்ட தேவ்தத் படிக்கல் சதம் அடித்து அசத்தினார்.
மறுபுறம் ரவீந்திர ஜடேஜா 117 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் 2, துருவ் ஜூரெல் 1 ரன்னில் நடையை கட்டினர். மானவ் சுதர் 90 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் அசங்கா மனோஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
குல்தீப் யாதவ் 1 ரன்னில் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து முகமது சிராஜ் 1 ரன்னில் மனோஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சரண்ஷ் ஜெயின் 45 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது. தேவ்தத் படிக்கல் 164 பந்துகளில், 18 பவுண்டரிகளுடன் 142 ரன்களும், குர்னூர் பிரார் 18 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை பிரதமர் லெவன் அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ், அசங்கா மனோஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 6 ரன்கள் பின்தங்கி உள்ள இந்திய அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.