ஹெனில் படேல்
புலவாயோ: யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான ஹெனில் படேல், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் ஆக்ரோஷம் தனக்கு பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நேற்று (ஜன.15) தொடங்கியது. பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய யு-19 அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க அணி உடனான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹெனில் படேல்.
இந்நிலையில், ஐசிசி டிஜிட்டல் தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது: “டேல் ஸ்டெயின் தான் எனது ஆல்-டைம் ஃபேவரைட் கிரிக்கெட் வீரர். புதிய பந்தை பயன்படுத்தி பந்து வீசும்போது எனக்கு அவரே இன்ஸ்பிரேஷனாக உள்ளார். எனக்கு அவரின் ஆக்ரோஷ ஆட்டம் மிகவும் பிடிக்கும். அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு ஆடுவது சுலபம் அல்ல, அது மிக மிக கடினம்.
பந்து வீசும்போது பேட்ஸ்மேனை விரைந்து வெளியேற்ற வேண்டுமென்ற மைண்ட்செட் உடன் செயல்படுவேன். அதற்கு தகுந்தபடி நான் பயிற்சி மேற்கொள்வேன். என்னை தயார் செய்து கொள்வேன். அது ஆட்டத்திலும் பிரதிபலிக்கும்” என ஹெனில் படேல் தெரிவித்துள்ளார்.