வாழ்க்கை எறிந்த தடைகளையெல்லாம் தனது அசைக்க முடியாத தன்னம்பிக்கையால் சுக்குநூறாக உடைத்தெறிந்து, உலகரங்கில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயரே பறக்கச் செய்திருக்கிறார் ஷர்மிளா தன்கர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளார் 40 வயதாகும் ஷர்மிளா தன்கர். ஹரியானா மாநிலம் சித்ரோலி கிராமத்தைச் சேர்ந்த சர்மிளாவின் வாழ்க்கை, பூப்பாதை அல்ல, முட்களால் சூழப்பட்ட போராட்டக்களம். தனது இரண்டாவது வயதிலேயே போலியோ நோயால் தாக்கப்பட்டு இடது காலின் இயங்கு திறனை இழந்தார்.
சிறுவயதிலேயே செய்து வைக்கப்பட்ட திருமணம், கொடுமைகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை என விதி அவரை அடுத்தடுத்துச் சோதித்தது. ஆனால், அந்தத் துயரங்களிலிருந்து தனது தாய் மற்றும் குடும்பத்தினரின் உறுதுணையோடு மீண்டெழுந்தார். பின்னர் ரேவாரியைச் சேர்ந்த தொழிலதிபர் அஜித் சிங் என்பவரை மறுமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஷர்மிளாவுக்குள் மறைந்திருந்த விளையாட்டு ஆர்வத்தை அடையாளம் கண்ட அவரது கணவர் அஜித் சிங், 2020-ல் பயிற்சியாளர் டெக் சந்தின் வழிகாட்டுதலின் கீழ் அவரைப் பாரா தடகளப் போட்டிகளில் களம் இறக்கினார்.
2020-ல் பயிற்சியைத் தொடங்கிய சர்மிளா, ஒரே ஆண்டுக்குள் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். 2022-ம் ஆண்டு பர்மிங்ஹாம் காமன்வெல்த்தில் நூலிழையில் (4-வது இடம்) பதக்கத்தை தவறவிட்டவர், இம்முறை முழு வீச்சோடு களம் கண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.