விளையாட்டு

5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு என்ன? - FIFA WC 2026

வேட்டையன்

சென்னை: சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பையின் தற்போதைய மதிப்பு என்ன என்பது குறித்து பார்ப்போம்.

உலோக பொருளான தங்கத்துக்கு எப்போதும் உலக அளவில் டிமாண்ட் இருக்கும். சர்வதேச நாடுகளுக்கு இடையிலான போர், போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் உள்ளிட்ட உலகளாவிய சூழல் காரணமாக தங்கம் விலை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (2022) மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பை பட்டம் வென்றது. அப்போது இந்த 5 கிலோ கோப்பையின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 2.4 கோடி ரூபாய். இப்போது சுமார் 157 சதவீதம் உயர்ந்து அதன் விலை ரூ.6.1 கோடியை நெருங்கியுள்ளது.

கடந்த 1974-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்காக தற்போது பயன்பாட்டில் உள்ள கோப்பையை இத்தாலி நாட்டை சேர்ந்த சிற்பி சில்வியோ கஸானிகா இதை வடிவமைத்தார். சுமார் 36.5 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த கோப்பை 18 காரட் தங்கத்தை கொண்டு பயன்படுத்தப்பட்டது. இதன் மொத்த எடை 6.175 கிலோகிராம். இதில் சுத்த தங்கத்தின் எடை 4.93 கிலோகிராம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதை வடிவமைக்க ரூ.21.5 லட்சம் செலவாகி உள்ளது.

இந்த கோப்பை ஃபிபாவின் தலைமையகம் அமைந்துள்ள சூரிச் நகரில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே இது கொண்டு வரப்படும். வெற்றியாளர் இந்த கோப்பையை தங்கள் வசம் தொடர்ந்து வைத்துக் கொள்ள முடியாது.

வெற்றியாளருக்கு தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பையைதான் ஃபிபா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பை ஏலத்துக்கு வந்தால் சுமார் 165 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT