விளையாட்டு

கவாஜா சுயசரிதை நூலின் ‘சர்ச்சை’ அத்தியாயமும், பாட் கமின்ஸ் ரியாக்‌ஷனும்!

ஆர்.முத்துக்குமார்

ஆஸ்திரேலிய முன்னாள் பேட்டர் உஸ்மான் கவாஜா தன் கிரிக்கெட் வாழ்க்கையை சுயசரிதை நூலாக வெளியிடுகிறார். அதில் 2018-ம் ஆண்டில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நடந்த ‘சாண்ட்பேப்பர் கேட்’ என்று கூறப்படும் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து விவரமாகப் பேசப்பட்டுள்ளது. ஓர் அத்தியாயத்தையே இதற்காக ஒதுக்கியுள்ளார் உஸ்மான் கவாஜா.

இந்நிலையில், இன்று தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே டர்பனில் முதல் டெஸ்ட் நடைபெறுகிறதை முன்னிட்டு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸிடம் கவாஜா சுயசரிதை நூல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை” என்று பதில் கூறியுள்ளார்.

உஸ்மான் கவாஜாவின் ‘Sabr: Finding My Way in Cricket and Life’ என்ற சுயசரிதை நூல் நவம்பர் 10 அன்று வெளியாக உள்ளது. ‘Sabr’ என்ற அரபுச் சொல்லுக்கு பொறுமை அல்லது சகிப்புத்தன்மை என்று பொருள்.

இந்த நூலின் முன்பதிப்பு பிரதிகளை பதிப்பகமான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இதுவரை வெளியிடாததால், நூலின் முழுமையான உள்ளடக்கம் ரகசியமாகவே உள்ளது. இருப்பினும், ஆரம்பகட்ட தகவல்களின்படி, நூலில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் மற்றும் 2018-ம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான சில புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுயசரிதை குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸிடம் உஸ்மான் கவாஜா ஏற்கெனவே பேசியுள்ளார். 2018-ம் ஆண்டு நடந்த ‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரத்தைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி அதிலிருந்து முழுமையாக கடந்து வந்துவிட்டதாக கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கமின்ஸ் மற்றும் கவாஜா இருவரும் விளையாடினர். அந்தப் போட்டியின்போது கேமரூன் பேன்கிராஃப்ட் பந்தில் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்தும், டேவிட் வார்னர் துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நீண்ட காலத் தடை விதித்தது.

டர்பனில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கமின்ஸ், கவாஜாவின் சுயசரிதை மற்றும் அதில் இடம்பெறும் தகவல்கள் குறித்து அவருடன் பேசியதை உறுதி செய்தார்.

எனினும், 2018-ம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக புதிதாக ஏதேனும் தகவல்கள் நூலில் வெளியாகும் என்ற கவலை தனக்கு இல்லை என்று அவர் கூறினார்.

“கடந்த எட்டரை ஆண்டுகளில் இந்த விவகாரம் தொடர்பான ஒவ்வொரு கேள்விக்கும் நான் ஏற்கெனவே லட்சம் முறை பதிலளித்துவிட்டேன். எனவே, இது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று கமின்ஸ் தெரிவித்தார்.

மேலும், கவாஜா சில வாரங்களுக்கு முன்பு தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் ஒரு சுயசரிதை நூலை வெளியிடப் போவதாகத் தெரிவித்ததாகவும் கமின்ஸ் கூறினார்.

“ஆம், உஸ்மான் சில வாரங்களுக்கு முன்பு எனக்கு அழைப்பு விடுத்தார். தான் ஒரு புத்தகத்தை வெளியிடப் போவதாகக் கூறினார். அதைப் பற்றி அவர் அதிக விவரங்களுக்குச் செல்லவில்லை. அடிப்படையில், தான் ஒரு புத்தகம் எழுதுவதாக எனக்குத் தெரிவித்தார். வழக்கம்போல, ‘எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்களுடைய கதையை நீங்கள் சொல்லலாம். அது பரவாயில்லை’ என்று நான் அவரிடம் கூறினேன்” என்று பாட் கமின்ஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT