சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவுகள் மற்றும் சொந்த மண்ணிலும் வெளியூர் மைதானங்களிலும் சீரற்ற ஆட்டத்திறனை வெளிப்படுத்திய போதிலும், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே-வின் பேட்டிங் பெரும்பாலும் சஞ்சு சாம்சனை சார்ந்தே உள்ளது. தொடக்க வீரராக அவர் அதிரடியான ஆரம்பத்தைக் கொடுக்கும்போது மட்டுமே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமைகிறது. சஞ்சு சாம்சன் நங்கூரமாகவும் அணியின் முதுகெலும்பாகவும் உருவெடுத்துள்ள நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்.
கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 87 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். நடுவரிசையில் கார்திக் சர்மா நம்பிக்கை அளிக்கத் தொடங்கி உள்ளார். கடந்த இரு ஆட்டங்களிலும் அவர், 54 மற்றம் 41 ரன்கள் சேர்த்திருந்தார். டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான தன்மையிலிருந்து மாறி, தற்போது பேட்டிங்கிற்கும் பந்துவீச்சிற்கும் சமமான வாய்ப்புள்ள ஆடுகளமாக மாறியுள்ளது. இருப்பினும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு கைகொடுப்பதால், சிஎஸ்கே அணியின் அகீல் ஹோசைன், நூர் அகமது ஆகியோர் நடு ஓவர்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்து இருந்த நிலையில் கடைசியாக மழையால் பாதிக்கப்பட்ட ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் போராடி வந்தாலும், இந்த வெற்றி லக்னோ அணியின் பிளே-ஆஃப் கனவை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் 56 பந்துகளில், 111 ரன்களும், ரிஷப் பந்த் 10 பந்துகளில், 32 ரன்களும் விளாசியிருந்தனர். மிட்செல் மார்ஷ் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும்.
நிக்கோலஸ் பூரனும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடத் தொடங்கி உள்ளார். பந்துவீச்சில் 16 விக்கெட்களை கைப்பற்றியுள்ள பிரின்ஸ் யாதவ் சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சுழலில் ஷாபாஸ் அகமது, திக்வேஷ் ராதி பலம் சேர்க்கக்கூடும்.
இதற்கிடையே சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும் பிற்பகலில் மழை பொழிவு இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டி திட்டமிட்டபடி தொடங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும்.
ஆர்சிபி - மும்பை மோதல்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ராய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. ஆர்சிபி அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.