விளையாட்டு

தொடர் தோல்வியில் சிஎஸ்கே - ஆட்ட வியூகத்தில் தப்புக் கணக்கா?

Ellusamy Karthik

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சிஎஸ்கே எதிர்கொண்டுள்ள இந்த பின்னடைவுக்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

கடந்த 2025 ஐபிஎல் சீசனை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே நிறைவு செய்தது. இப்போது நடப்பு சீசனிலும் அதே 10-ம் இடத்தில் பூஜ்ஜியம் புள்ளியுடன் சிஎஸ்கே உள்ளது. சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வி, நடப்பு சீசனில் மூன்று ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவி உள்ளது.

ஆட்ட வியூகத்தில் தப்பு கணக்கா?

இந்த சீசனை முன்னிட்டு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் மாதிரியான ஆல் ரவுண்டர்களை அணியில் இருந்து சிஎஸ்கே விடுவித்தது. சுமார் 43.4 கோடி ரூபாய் உடன் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில் பங்கேற்றது.

தரமான வெளிநாட்டு ஆல்ரவுண்டர், மிடில் ஆர்டர் அல்லது பின்வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடும் வெளிநாட்டு பேட்ஸ்மேன், வேகப்பந்து வீசும் வெளிநாட்டு வீரர்தான் சிஎஸ்கே நிர்வாகத்தின் டார்கெட்டாக இருந்தது. இருப்பினும் வெளியேறிய சாம் கரண், உடற்தகுதி காரணமாக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடாமல் உள்ள டெவால்ட் பிரேவிஸ், காயத்தால் சீசன் முழுவதையும் தவறவிட்டுள்ள நேதன் எல்லிஸ் ஆகியோருக்கு சரியான மாற்று வீரர்கள் இப்போது சென்னை அணியில் இல்லை.

          

நேதன் எல்லிஸுக்கு மாற்றாக அணியில் ஒப்பந்தம் ஆகியுள்ள ஸ்பென்சர் ஜான்சன், சீசன் தொடங்கி முதல் மூன்று வாரங்களுக்கு பிறகே அணியில் இணைவார் என கூறப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். ஒரு பக்கம் பேட்டிங் யூனிட்டை சீர் செய்வதிலும் சிஎஸ்கே கவனம் செலுத்தினாலும், அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. இதோடு பீல்டிங்கிலும் கேட்ச் வாய்ப்பை நழுவ விடுகிறது. இப்படி அணியில் பல ஓட்டைகள் உள்ளன.

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில் மேற்கூறிய வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு இருந்தது. இதில் சில வீரர்களை வாங்க முயற்சித்தது. இருந்தும் ஏல தொகை கூடியதால் அதை தவிர்த்து விட்டது.

நவீன டி20 கிரிக்கெட் பார்மெட்டுக்கு ஏற்ப அணியை கட்டமைக்கிறேன் என சொல்லி இப்போது உள்ளதையும் கோட்டை விட்டுள்ளது சிஎஸ்கே. இப்போது சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய வீரர்களில் இருவரான சமீர் ரிஸ்வி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படி சிஎஸ்கே-வின் இழப்பு மற்ற அணிகளுக்கு ஆதாயமாக மாறியுள்ளது.

சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் டாப் ஆர்டரில் அணிக்கு சிறந்த தொடக்கம் கொடுக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. அவர்களை தொடர்ந்து வரும் ஆயுஷ் மாத்ரேவும் தொடக்க ஆட்டக்காரர்தான். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் திறனை அவர் கொண்டுள்ளார். நடுவரிசையில் ஷிவம் துபே, சர்பராஸ் கான் ஆகியோர் உள்ளனர்.

இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரஷாந்த் வீர் ஆகியோரை தலா ரூ.14.2 கோடிக்கு வாங்கி கவனம் ஈர்த்தது. இருவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் என அறியப்பட்டனர். இருப்பினும் அவர்களின் வரவு சிஎஸ்கே அணிக்கு இன்னும் முழு பலனை தரவில்லை.

பந்து வீச்சை பொறுத்தவரையில் சிஎஸ்கே பவுலர்கள் 3 ஆட்டங்களில், 50.4 ஓவர்களில் 588 ரன்களை லீக் செய்துள்ளனர். மொத்தமாக 10 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளனர். எதிர்வரும் ஏப்.11-ம் தேதி அன்று சேப்பாக்கத்தில் டெல்லி அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் முக்கிய மாற்றங்களை சிஎஸ்கே மேற்கொண்டு அனைத்துக்கும் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT