ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்வை...
5 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்களுக்கு வெளியே சென்றதில்லை. ஆனால், கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல் 7-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, அதன் தொடர்ச்சியாக 2025-ல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
இதன் மூலம், தனது வரலாற்றிலேயே முதல்முறையாகத் தொடர்ந்து இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் சிஎஸ்கே ஏமாற்றம் அளித்தது. இருப்பினும், கடந்த சீசனில் சிஎஸ்கே நல்ல படிப்பினையை கற்றுக்கொண்டது. அது மாற்றத்துக்கான இளம் வீரர்களின் சக்தி.
ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டதைக் கண்ட அணி நிர்வாகம், ‘டாடி ஆர்மி’ (வயதான வீரர்களை அதிகம் உள்ளடக்கிய அணி) என்ற பிம்பத்திலிருந்து விலகி, துடிப்புள்ள இளம் வீரர்களின் திறனை நம்பி ஒரு புதிய பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
தொடர்ச்சியாக 3-வது முறையாக முதல் நான்கு இடங்களுக்கு வெளியே செல்வதை தவிர்க்க, இந்த ‘இளைஞர் படை’ இந்த ஆண்டு கை கொடுக்கும் என்று சிஎஸ்கே அணி பெரிதும் நம்புகிறது.
இளைஞர்களே அச்சாணி...
கடந்த சீசனில் தொடக்க ஆட்டங்களில் பவர்பிளேவில் ரன்கள் சேர்க்க சிஎஸ்கே தடுமாறியது. இதன் பின்னர் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே, மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனான தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரின் வருகைக்கு பின்னரே ரன் குவிப்பில் சிஎஸ்கே அணி உத்வேகம் பெற்றது.
இதுவே அந்த அணியின் ஏல வியூகத்தை மாற்றியமைத்தது. ‘இளைஞர்களே அணியின் அச்சாணி’ என்ற கொள்கையை சிஎஸ்கே இப்போது உறுதியாகக் கையில் எடுத்துள்ளது. சாதனை படைத்த ஏலத் தொகை... இதன் ஒரு கட்டமாகவே 20 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பிரசாந்த் வீர் மற்றும் 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா ஆகிய இருவரையும் தலா ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுத்து சிஎஸ்கே அணி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட ‘அன்கேப்டு’ இந்திய வீரர்கள் என்ற பெருமையை இந்த ஜோடி பெற்றிருந்தது. அதிரடி ஆட்டக்காரர்களான சர்ஃபராஸ் கான், அமன் ஹக்கிம் கான் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்த சிஎஸ்கே, சுழற்பந்து வீச்சை வலுப்படுத்த ராகுல் சாஹர், ஸ்ரேயஸ் கோபால், அகீல் ஹொசைன் ஆகியோரையும் சேர்த்துள்ளது. ஏற்கெனவே நூர் அகமதுவும் அணியில் உள்ளார். இவர்களுடன் பிரசாந்த் வீரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியது சிஎஸ்கே-விற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனினும் இறுதிக்கட்ட ஓவர்களில் மேட் ஹென்றி, ஜாக் ஃபோல்க்ஸ் ஆகியோரை திறம்பட பயன்படுத்திக் கொள்வதில் சிஎஸ்கே அணி முனைப்பு காட்டக்கூடும். அனுபவம் வாய்ந்த கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி ஆகியோரும் கைகொடுக்கக்கூடும். ஆல்ரவுண்டராக ஷிவம் துபே முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணி மேற்கொண்ட மிக முக்கியமான முடிவு ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை வாங்கியதுதான். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜடேஜா சிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பாக விளங்கியவர். அந்த அணியுடன் மூன்று முறை சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார்.
இருப்பினும், சஞ்சு சாம்சனின் வருகை சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமான ‘பவர்பிளே’ ஓவர்களில் அதிரடியாக ரன் குவிப்பதில் உள்ள சிக்கலைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் 97 ரன்களும், அரை இறுதியில் 89 ரன்களும், இறுதிப் போட்டியில் 89 ரன்களும் விளாசி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
சிறந்த பார்மில் உள்ள அவர், சிஎஸ்கே அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சஞ்சு சாம்சனும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இணைந்து அதிரடியான முன்வரிசை பேட்டிங்கை உறுதி செய்யக்கூடும். போட்டியின் சூழலுக்கு ஏற்ப தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை சஞ்சு சாம்சனிடம் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதன் காரணமாக, ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு பந்துவீச்சாளர் களைக் கூடகளமிறக்கும் வசதி சிஎஸ்கே-விற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சஞ்சு சாம்சனின் வருகை, 44 வயதான தோனியை மட்டுமே சார்ந்து இருக்கும் நிலையிலிருந்து சிஎஸ்கே அணி மெல்ல மெல்ல விலகுவதைக் குறிக்கக்கூடும். இதன் மூலம், தோனி ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியின் கீழ் புதிய ரோலில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனா?” என்ற தீராத கேள்வி இந்த ஆண்டும் அவரைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அணி விவரம்
பேட்ஸ்மேன்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ், கார்த்திக் சர்மா. ஆல்ரவுண்டர்கள்: ஜேமி ஓவர்டன், மேத்யூ ஷார்ட், அமன் ஹக்கிம் கான், பிரசாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், ஷிவம் துபே, அன்ஷுல் கம்போஜ், ஜாக் ஃபோக்ஸ். பந்துவீச்சாளர்கள்: நூர் அகமது, ராகுல் சாஹர், அகீல் ஹோசைன், ஸ்ரேயஸ் கோபால், கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மேட் ஹென்றி, குர்ஜப்னீத் சிங்.
மோதல்கள்
மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் | குவாஹாட்டி | இரவு 7.30
ஏப்ரல் 3 - பஞ்சாப் கிங்ஸ் | சென்னை | இரவு 7.30
ஏப்ரல் 5 - ஆர்சிபி | பெங்களூரு | இரவு 7.30
ஏப்ரல் 11 - டெல்லி கேப்பிடல்ஸ் | சென்னை | இரவு 7.30