ஐபிஎல் நாயகர்களையும் ஸ்பான்சர் நிறுவனங்களுக்கு விளம்பர வருவாயைப் பெருக்கிக் கொட்டித்தரும் நட்சத்திர வீரர்களையும் மட்டுமே கவுரவிப்பதா, பாராட்டு விழா எடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏன் இந்தக் கேள்வி எழுந்து வருகிறது எனில் ஐபிஎல் 2025-க்கு முன்னதாக அனைத்து 18 ஐபிஎல் தொடர்களிலும் ஆடிய நட்சத்திர நாயக வீரர்களுக்குப் பாராட்டு விழா ஒன்றை பிசிசிஐ நடத்தியது. அதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனிக்கு சிறப்பு மெமண்டோக்கள் வழங்கப்பட்டன.
அதில் தவறு இல்லை, ஆனால் ஐபிஎல் தொடரில் ஒரு இந்திய வீரர் முதல் சதத்தை எடுத்தார் என்றால் அது மணீஷ் பாண்டேதான். இது 2009 ஐபிஎல் தொடரில் நிகழ்ந்த சாதனையாகும். இதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால், மணீஷ் பாண்டேவை பிசிசிஐ ஒதுக்கி விட்டது. இதோடு 2014 ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றவர் மணீஷ் பாண்டே. கோப்பையை வெல்வதற்கான பிரமாதமான இன்னிங்ஸ் என்று அது அப்போது வர்ணிக்கப்பட்டது. 2014 மற்றும் 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் மணீஷ் பாண்டேயின் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஐபிஎல் அணிகளால் ஒதுக்கப்பட்டார், 2024, 2025 தொடர்களில் 4 ஆட்டங்களில் மட்டுமே அவர் அழைக்கப்பட்டார். அப்படியிருந்தும் 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் ரமந்தீப் சிங் ஃபார்மில் இல்லை என்பதால் மணீஷ் பாண்டேயைத்தான் பேக்-அப் வீரராக அழைத்தனர். 147 சிறிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்தாலும் சேசிங்கில் மணீஷ் பாண்டே 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து சேசிங்கை ஒருமுகப்படுத்தி அதிகபட்ச ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
ஆனால் மணீஷ் பாண்டேயின் பீல்டிங் அபாரமாக இருந்ததைப் பார்த்தோம். அதுவும் டிம் டேவிட்டுக்கு எடுத்த கேட்ச் திகைப்பூட்டும் ரகத்தைச் சேர்ந்தது. ஃபீல்டிங்கில் மணீஷ் பாண்டே அருமையான பங்களிப்பை கொல்கத்தாவுக்கு இந்த சீசனில் செய்துள்ளார். பேட் செய்ய மட்டும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை அன்று நன்றாகப் பயன்படுத்தினார்.. புதனன்று நடந்த மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் அபாய வீரர் ரியான் ரிக்கிள்டன் அடித்த ஷாட் வானத்தில் நெடிதுயர்ந்து சென்று கீழே இறங்கும் போது மணீஷ் பாண்டேதான் முன்னால் டைவ் அடித்து சரியாக கணித்துக் கேட்ச் எடுத்தார். இந்தப் போட்டியிலும் மனீஷ் பாண்டே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பேட்டிங்கில் மே 2025-க்குப் பிறகு அன்று களமிறங்கிய மணீஷ் பாண்டே முதல் 4 பந்துகள் டாட் பால்களானதும் அனைவரும் இவரையா எடுத்தார்கள் என்பது போல் நினைத்திருப்பார்கள், ஆனால் பும்ராவை அடுத்த பந்து அடித்த கிளாசிக் ஆன் ட்ரைவ் மனீஷ் பாண்டேவிடம் எஞ்சியிருக்கும் எச்ச சொச்ச திறமைக்குச் சான்று. இன்னொரு ஈஎஸ்பிஎன் புள்ளி விவரமும் பாண்டே மீதான ஆச்சரியத்தை அதிகப்படுத்துகிறது, பும்ராவுக்கு எதிராக 42 பந்துகளில் 80 ரன்களை எடுத்துள்ளார் மணீஷ் பாண்டே, அன்று வரை ஒரு முறை கூட பும்ரா இவரை வீழ்த்தவில்லை. ஆனால் அன்று பும்ராவின் அந்த ஆஃப் கட்டரில் பவுல்டு ஆகி முதல் முறையாக பாண்டே பும்ராவிடம் அவுட் ஆனார்.
இப்படிப்பட்ட வீரர், இந்திய அணியிலிருந்து கோலி- ரவிசாஸ்திரி இணைகளின் காலக் கட்டத்தில் சம்பந்தமில்லாமல் ஒழிக்கப்பட்டார். அப்போது விராட் கோலி இப்போது உள்ள எளிமையான சகோதரத்துவமான கோலி அல்ல. கொஞ்சம் திமிறும் அகம்பாவமும் கொண்டவராகத்தான் இருந்தார். நல்ல பார்மில் இருந்த போது உட்கார வைத்து உட்கார வைத்து அழகு பார்த்தனர்.
18 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆடியவ நட்சத்திர வீரர்களுக்குப் பாராட்டு விழா எடுத்த பிசிசிஐ மணீஷ் பாண்டேயை விட்டது கூரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இப்போதிருக்கும் பிசிசிஐ ரெஜீமுக்கு எதிராக வாயைத் திறக்கவில்லை. இன்று 36 வயதிலும் அற்புதமாக பீல்டிங் செய்கிறார். பேட்டிங்கில் கிடைக்கும் அரிய வாய்ப்பிலும் அணியை ஒருமுகப்படுத்தி வழிநடத்துகிறார். உண்மையில் எளிமையானவர், அமைதியானவர் ஆர்ப்பாட்டமில்லாதவர் மணீஷ் பாண்டே பிசிசிஐ பாராட்டு விழாவில் அவரை விட்டதற்காக நிச்சயம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.