டிசம்பர் 10, 2022, இதே தினத்தில் இந்திய அணித்தேர்வுக்குழு இப்போது கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இஷான் கிஷனுக்கு பொன் தினமாக அமைந்ததாகும். வங்கதேசத்தின் சட்டோகிராம் மைதானத்தில் 126 பந்துகளில் காட்டடி இரட்டைச் சதத்தை எடுத்தார் இஷான் கிஷன். விராட் கோலியும் இவருடன் கைகோர்த்து சதம் ஒன்றை எடுக்க இந்தியா அந்த 3வது ஒருநாள் போட்டியில் 409 ரன்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 182 ரன்களுக்குச் சுருட்டியது இந்தியா. ஆனால் தொடரை 1-2 என்று வங்கதேசத்திடம் இழந்தாலும் இந்த ஆறுதல் வெற்றியில் இந்திய அணி தன் மொத்த பவர் ஹவுஸ் பேட்டிங்கையும் காட்டி வங்கதேச வீரர்களை மைதானம் நெடுக ஓட விட்டனர் இஷான் கிஷனும் விராட் கோலியும்.
126 பந்துகளில் இரட்டைச் சதம் கண்ட இஷான் கிஷன், கிறிஸ் கெய்ல் அதிவேக 138 பந்து இரட்டைச் சத ஒருநாள் சாதனையை முறியடித்தார். 36-வது ஓவரில் இஷான் கிஷன் 131 பந்துகளில் 210 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர் ஆடியிருந்தால் அவ்வளவுதான் முச்சதத்தையும் கடந்திருப்பார் இஷான். இந்த இன்னிங்சில் 24 பவுண்டரிகள் 10 சிக்சர்களை பறக்க விட்டார் அவர் 156 ரன்களை ஓடாமலேயே பவுண்டரிகள் மூலம் காய்ச்சி எடுத்துவிட்டார் இஷான் கிஷன்.
விராட் கோலி 91 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 113 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷனும் கோலியும் இணைந்து 31 ஓவர்களில் 290 ரன்களை விளாசினர். இஷான் கிஷன் 24 பவுண்டரிகளை அவர் மட்டுமே விளாச வங்கதேச அணி மொத்தமாகவே 20 பவுண்டரிகளை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அக்சர் படேல் 2, இப்போது இந்தியா மறந்து விட்ட காஷ்மீர் வீரர், அதிவேக பவுலர் உம்ரன் மாலிக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இஷான் கிஷனுக்கு இந்தப் போட்டியில் கிடைத்த அதிர்ஷ்டம் என்னவெனில் ரோஹித் சர்மா காயமடைந்ததால் இவர் மேக் ஷிஃப்ட் ஓப்பனராக இறங்கினார், கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதோடு, வங்கதேச பவுலர்களுக்கு அச்சமூட்டும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இந்த இன்னிங்ஸின் ஒரு கட்டத்தில் இஷான் கிஷன் எங்கு போட்டாலும் எப்படிப் போட்டாலும் பவுண்டரிதான் என்ற ரீதியில் பிரமாதமாக ஆடினார்.
தன் முதல் ஒருநாள் சதத்தை 85 பந்துகளில் எடுத்தார். அடுத்த 18 பந்துகளில் 150 கடந்தார். அடுத்த 23 பந்துகளில் இரட்டைச் சதம் உலக சாதனையாக அமைந்தது. வங்கதேச பவுலர்களில் டஸ்கின் அகமது வகையாக மாட்டினார் 9 ஓவர்களில் 89 ரன்களை 10 பவுண்டரி 4 சிக்சர்கள் என்று வாரி வழங்கினார்.
மெஹதி ஹசன் 10 ஒவர் 76, எபாதத் ஹுசைன் 10 ஒவர் 80. முஸ்தபிசுர் 10 ஒவர் 66 என்று அனைவருக்கும் சாத்து முறை நடந்தது. தொடரை இழந்தாலும் இந்த அற்புதமான இன்னிங்ஸை மறக்க முடியாது, இஷான் கிஷனின் இரட்டைச் சதமும், விராட் கோலியின் அவர் பாணி சதமும் கண்ட இந்த நாள் இனிய நாளே.