சுரேஷ் ரெய்னா
புதுடெல்லி: வித்தியாசமான ஸ்டைல்களை பேட்ஸ்மேன்கள் கொண்டு வருவதால் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் புதுமையானதாக மாறியுள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய சாஃப்ட்பால் கிரிக்கெட் போட்டியை டெல்லியில் நேற்று சுரேஷ் ரெய்னா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வித்தியாசமான பேட்டிங் பாணிகளை களத்தில் செயல்படுத்துகின் றனர். அவர்களது பேட்டிங் செயல்பாடுகள் பல் வேறு வித்தியாசங்களை உள்ளடக்கியுள்ளன. இதனால் கிரிக்கெட் மிகவும் புதுமையான விஷயமாக மாறியுள்ளது.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் வித்தியாசமான பாணியில் விளையாடுகிறார். அதேபோல் அதிரடி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் ஆகியோர் 50 ஓவர் போட்டிகளில் வித்தியாசமாக விளையாடுகின்றனர். களத்தில் பல்வேறு வித்தியாசமான பாணிகளை இவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
இப்போது நம்மிடம் ஏராளமான பயிற்சியாளர்கள் இருப்பது நமது அதிர்ஷ்டம்.
வித்தியாசமான, அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடும் பல வீரர்கள் நம்மிடம் உள்ளனர். அவர்கள் அற்புதமாக விளை யாடி, அழுத்தத்தை சிறப்பாகக் கையாளுகின்றனர்.
போட்டியின்போது அனைவரும் வலுவான பங்களிப்பை அளிப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள புவனேஸ்வர் குமாருக்கு எனது வாழ்த்துகள். சமீப காலமாக அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் அருமையாக விளையாடியுள்ளார். அவரது கடின உழைப்பு, விடாமுயற்சியால் மீண்டும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
36 வயதிலும் அவர் தனது மன உறுதியை வெளிப்படுத்தி விளையாடி வருகிறார். அவர் மிகவும் ஒழுக்கமான பந்துவீச்சாளராகத் திகழ்கிறார். செயல்முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நபராக அவர் இருக்கிறார். தனது உடற்தகுதிக்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின்போது அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.