கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று மகளிருக்கான பாரா குண்டு எறிதலில் எஃப் 57 பிரிவில் இந்தியாவின் ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பாரா வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஷர்மிளா தன்கர்.
அவரது இந்த வெற்றி, காமன்வெல்த் போட்டிகளில் பாரா தடகளத்தில் பதக்கம் வெல்வதற்கான இந்தியாவின் 20 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு கட்டியது. இதற்கு முன்னர், 2006-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஆடவருக்கான வட்டு எறிதலில் ரஞ்சித் குமார் ஜெயசீலன் வென்ற பதக்கமே காமன்வெல்த் பாரா தடகளத்தில் இந்தியாவின் கடைசி பதக்கமாக இருந்தது.
எஃப் 57 பிரிவில் இந்தியாவின் ஷில்பா ஷைலா 7.26 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முதலில் நைஜீரியாவின் யூகேரியா இயாசி வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷைலா 4-வது இடம் பிடித்ததாகவே கூறப்பட்டது. ஆனால், யூகேரியா இயாசிஃபவுல் செய்ததாக இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆய்வுக்கு பின்னர் யூகேரியா இயாசி எறிந்த ஒரே செல்லுபடியாகும் தூரமும் ஃபவுல் என நடுவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் பின்னரே ஷில்பா ஷைலாவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
சர்வேஷ் குஷாரே
ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரம் தாண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் இந்திய வீரர், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். எனினும் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை சர்வேஷ் குஷாரே நூலிழையில் தவறவிட்டார். ஜமைக்காவின் ரொமைன் பெக்ஃபோர்டு தங்கப் பதக்கம் வென்றார்.
2.25 மீட்டர் உயரத்தை லாவகமாகத் தாண்டிய பிறகு, 31 வயதாகும் சர்வேஷ் குஷாரே மற்றும் பெக்ஃபோர்ட் ஆகிய இருவரும் 2.28 மீட்டர் உயரத்தைத் தாண்டத் தவறினர். ஆனால், இந்திய வீரரை விட ‘கவுண்ட்-பேக்’ முறையில் ஒரு முறை மட்டுமே குறைவாகத் தவறு செய்திருந்ததால், ஜமைக்காவின் ரொமைன் பெக்ஃபோர்ட் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இங்கிலாந்தின் ஜேக் கிமானி 2.20 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கடைசியாக 2022-ம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
பளுதூக்குதல்
ஆடவருக்கான பளுதூக்குதலில் 79 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வல்லூரி அஜய பாபு 330 கிலோ எடையை (ஸ்னாட்ச் 149 + கிளீன் அன்ட் ஜெர்க் 181) தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். 21 வயதாகும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லூரி அஜய பாபு ஒரு கிலோ எடை வித்தியாத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
நடப்பு தொடரில் பளுதூக்குதலில் இந்தியா வெல்லும் 6-வது பதக்கம் இதுவாகும். மலேசியாவின் எரி ஹிதாயத் முஹம்மது 331 கிலோ எடையை (ஸ்னாட்ச் 147 + கிளீன் அன்ட் ஜெர்க் 184) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே 325 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
குத்துச்சண்டை
மகளிருக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாக் ஷி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் போட்ஸ்வானாவின் லெதாபோ மோடுகனேலேவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவருக்கான 70 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுமித் 1-4 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் ஜான் மெக்கோனலிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தேஜஸ் ஷிர்சே பந்தய தூரத்தை 15.39 வினாடிகளில் நிறைவு செய்து கடைசி இடத்தை பிடித்தார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக தேஜஸ் ஷிர்சேவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவரால் முழு பலத்துடன் செயல்பட முடியாமல் போனது.
தேஜஸ் ஷிர்சே கூறும்போது,“இறுதிப் போட்டிக்கு ஆயத்தமாகி கொண்டிருந்த போது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனினும் போட்டியில் இருந்து விலக விரும்பவில்லை, அதனால் என் பிசியோதெரபிஸ்ட் ஆலோசனையின் படி காயம் ஏற்பட்ட இடத்தை துணியால் இறுகக் கட்டிக்கொண்டு ஓடினேன்.
காமன்வெல்த் விளையாட்டில் 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் நான் தான். அதனால் போட்டியில் இருந்து விலகி ஒட்டுமொத்த தேசத்தையும் ஏமாற்ற விரும்பாததால் காயத்துடன் பங்கேற்றேன்” என்றார்.
நீச்சல்
நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் பந்தய தூரத்தை 1:58.05 விநாடிகளில் கடந்து 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அதேவேளையில் 800 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் ஆர்யன் நெஹ்ரா இலக்கை 8:07.26 விநாடிகளில் அடைந்து 8-வது இடம் பிடித்தார்.
பாரா நீச்சல்
நீச்சலில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பந்தய தூரத்தை 55.58 வினாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக 14-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் பந்தய தூரத்தை 24.94 வினாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக 28-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பாரா நீச்சலில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் புதிகினா பந்தய தூரத்தை 26.33 வினாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக 6-வது இடமும் அலி இமாம் (28.41 வினாடிகள்) 8-வது இடமும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
அரை இறுதியில் விஷால்
ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஹீட் 6-ல் இந்திய வீரர் விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 46.49 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். 22 வயதாகும் விஷால் தென்னரசு கயல்விழி தமிழகத்தை சேர்ந்தவர்.
ஒட்டுமொத்தமாக, விஷாலின் 46.49 வினாடிகள் நேரமானது, அரை இறுதிக்குத் தகுதிபெற்ற 16 வீரர்களில் 14-வது நேரமாகப் பதிவானது. அரை இறுதி நாளை (30-ம் தேதி) நடைபெறுகிறது. ஹீட் 3-ல் இடம் பெற்றிருந்த மற்றொரு தமிழக வீரரான ராஜேஷ் ரமேஷ் பந்தய தூரத்தை 47.43 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.