இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சமிந்தா வாஸ்
புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்தா வாஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
51 வயதான சமிந்தா வாஸ், இலங்கை அணிக்காக 111 டெஸ்ட், 322 ஒருநாள் மற்றும் 6 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 761 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ல் உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக இளம் வீரர்களுடன் தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், டெல்லி அணியுடன் அவர் பயிற்சியாளராக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.
எதிர்வரும் ஐபிஎல் சீசனை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களுடன் டெல்லி அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி, துணை பயிற்சியாளராக யுவராஜ் சிங், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா ஆகியோர் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்.
டெல்லி அணியில் ஸ்டார்க் மற்றும் தங்கராசு நடராஜன் உள்ளிட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதோடு இங்கிடி, ஜேமிசன், அகிப் நபி ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அவர்கள் வாஸ் உடன் பயணிப்பது ஆட்ட நுணுக்கம் சார்ந்து டெல்லி அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.