வதோதரா: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படவில்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்பட்டு வரும் நிலையில் டி 20 அணியில் அவருக்கு இடம் கொடுக்கப்படாதது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இன்று மோத உள்ளது. இதையொட்டி வதோதராவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஷுப்மன் கில் கூறியதாவது: என் வாழ்க்கையில், நான் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன், என் விதியில் என்ன எழுதப்பட்டிருந்தாலும், யாரும் அவற்றை என்னிடமிருந்து பறிக்க முடியாது. இது என்னுடைய நம்பிக்கை. டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை.
தேர்வுக்குழுவின் முடிவை நான் மதிக்கிறேன். டி 20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டு வீரராக இருக்கும் ஒருவர் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். போட்டிகளில் விளையாடும்போதும், என்ன நடக்கப் போகிறது என அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். அப்படி நிகழ்காலத்தில் கவனம் செலுத்தும்போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும், நிகழ்காலத்தில் இருப்பது உங்களது வாழ்க்கையை எளிமையானதாகவும், அமைதியானதாகவும் மாற்றும்.
அணியில் கேப்டனாக இருக்கும்போது, காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியத சூழல் ஏற்பட்டால், அது ஒருபோதும் எளிமையான விஷயமாக இருக்காது. அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் விளையாடும் போது, கேப்டனாக அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியாதது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கும்போது, விளையாட முடியாமல் வெளியே அமர்ந்திருப்பது வெறுப்பாக இருக்கும்.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வெல்லவில்லை. வெற்றி பெறுவது எளிதாக இருந்தால் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நாம் கோப்பையை வெல்லலாம். இதை சொல்வது எளிது. ஆனால் எந்த வடிவிலான உலகக் கோப்பை தொடரும் எளிதானது இல்லை. பெரிய அளவிலான ஐசிசி தொடர்களை வெல்ல வேண்டுமானால் மீள்தன்மை, விடா முயற்சி, மன உறுதி தேவை.
டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை பொறுத்தவரை போட்டிகளுக்கு தயாராவதற்கு போதிய நேரம் இல்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளோம். உலகம் முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி
பெற வேண்டுமென்றால் அதற்கு கடினமாக தயாராக வேண்டும். இதை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.